இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

காலஞ்சென்ற கௌரவ முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு பாராளுமன்றத்தில் அரச அஞ்சலி

திகதி : 2019-11-21

காலஞ்சென்ற கௌரவ முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் அரச அஞ்சலிக்காக நாளை நவம்பர் 22ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணிவரை பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

 

பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் முன்னாள் பணியாளர்கள் நாளையதினம் பிற்பகல் 12.30 மணிக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு வருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இலங்கையின் பதினான்காவது பிரதமராக இருந்த டி.எம் ஜயரட்ன பாராளுமன்றத்துக்கு முதன்முறையாக 1970 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டார். மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1951 ஆம் ஆண்டு கண்டியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த பின்னர் அதன் பதின்மூன்றாவது உறுப்பினராக உறுப்புரிமையை பெற்றார்.

 

கம்பளையில் அமைந்துள்ள தொளுவை மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற அவர் தொளுவை வித்தியாலயத்தின் ஆசிரியராகவும் தொளுவை தபால் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

 

1994 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் அரசாங்கத்தில் ஜயரட்ன அவர்கள் முதல்முறையாக அமைச்சரவைக்குத் தெரிவுசெய்யப்பட்டார். காணி, விவசாயம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

 

அதனை அடுத்து ஜயரட்ன அவர்கள் விவசாயம், உணவு மற்றும் கூட்டுறவு, தபால், தொலைத்தொடர்பு மற்றும் மலைநாட்டு அபிவிருத்தி, கிராமிய பொருளாதார அபிவிருத்தி, பெருந்தோட்ட கைத்தொழில், புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் போன்ற பல்வேறு அமைச்சுக்களில் பணியாற்றியுள்ளார். அவர் 2010ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை பிரதமராக சேவையாற்றினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த மிகவும் சிரேஷ்ட உறுப்பினரான அவர் இறக்கும்வரை அக்கட்சியின் ஆலோசகராகவும் சேவையாற்றியிருந்தார்.

 

1993 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஸ்தாபக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் இறக்கும்வரை அப்பதவியை வகித்திருந்தார்.

 

இவர் அனுலா யாப்பா ஜயரட்னவின் அன்புக் கணவரும்¸ பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரட்ன மற்றும் இரு புதல்விகளின் அன்புத் தந்தையாருமாவார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom