| முதலாம் மதிப்பீடு |
| 1 |
அரசியலமைப்பின் உறுப்புரை 78 இன் பிரகாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசாங்கச் சட்டமூலமொன்று அரசியலமைப்பின் உறுப்புரை 77 இன் பிரகாரம் சட்டத்துறைத் தலைமை அதிபதியின் அவதானிப்புகளுடனும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்தில் கிடைக்கப்பெற்றதும் அதனை நிலையியற் கட்டளை 45 இன் பிரகாரம் முதலாம் மதிப்பீட்டுக்காக ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறச் செய்வதற்கு சட்டமூல அலுவலகம் அதனைச் சபை ஆவண அலுவலகத்துக்கு அநுப்பி வைக்கும். |
| 2 |
முதலாம் மதிப்பீட்டின் பின் சட்டமூலம் அச்சிடப் பணிக்கப்பட்டதும் சட்டமூல அலுவலகம் அச்சட்டமூலத்துக்கு இலக்கமொன்றை இட்டு, மும்மொழிகளிலும் ஒப்பிட்டு, அச்சிடச் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விநியோகிப்பதற்கும் அரசியலமைப்பின் சொல்லப்பட்ட உறுப்புரை 78 மற்றும் நிலையியல் கட்டளை 45 ஆகியவற்றின் பிரகாரம் ஏழு நாட்களின் பின்னர் இரண்டாம் மதிப்பீட்டுக்காக ஒழுங்குப்பத்திரத்தில் இடுவதற்கும் ஆவன செய்யும். |
| 3 |
அரசியலமைப்பின் உறுப்புரை 121 இன் பிரகாரம் சட்டமூலமொன்றுக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படுமிடத்து பாராளுமன்றத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததன் பின்னர் அல்லது மூன்று வாரங்களின் பின்னர் மட்டுமே அத்தகைய சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக நிருணயிக்கப்படும். நிலையியல் கட்டளை 50 இன் பிரகாரம் மனு கிடைக்கப்பெற்றமை மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஆகிய இரண்டையும் பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்குச் சட்டமூல அலுவலகம் வழிவகுக்கும். |
| 4 |
அரசியலமைப்பின் உறுப்புரை 122 இன் பிரகாரம் தேசிய நலனுக்கு அவசரமானதென அமைச்சரவை சான்றுபடுத்திய சட்டமூலமொன்று பாராளுமன்றத்துக்குக் கிடைக்குமிடத்து, நிலையியல் கட்டளை 45 மற்றும் 46 என்பவற்றின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, மும்மொழிகளிலும் ஒப்பிடப்பட்டு, அச்சிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் சட்டமூல அலுவலகம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக அச்சட்டமூலத்தை ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறச் செய்யும். உயர் நீதிமன்றத் தீர்மானம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கும் சட்டமூல அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளும். |
| 5 |
அரசியலமைப்பின் 154 (எ). 5(அ) உறுப்புரையின் ஒன்பதாவது அட்டவணையான, ஒருங்கியை நிரலிலுள்ள சட்டமூலமொன்று பாராளுமன்றத்துக்குக் கிடைக்கும்போது, சட்டமூல அலுவலகம் அது பற்றிப் பாராளுமன்றத்தில் அறிவிக்கச் செய்வதுடன் முதலாம் மதிப்பீட்டுக்காக ஒழுங்குப்பத்திரத்திலும் இடம்பெறச் செய்யும். முதலாம் மதிப்பீட்டின் பின்னர் அச்சட்டமூலம் மும்மொழிகளிலும் ஒப்பிடப்பட்டு, அச்சிடப்பட்டு நிலையியற் கட்டளை 46அ. (2) இன் பிரகாரம் சட்டமூலம் பற்றிய மாகாண சபைகளின் கருத்துக்களை அறிவதற்காக அவற்றுக்கு அநுப்பப்படுகின்றது. மாகாண சபைகளின் கருத்துக்கள் பெறப்பட்டதன் பின்னர், அது பற்றிப் பாராளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய அறிவித்தலைச் சட்டமூல அலுவலகம் தயார் செய்வதுடன் நிலையியற் கட்டளை 46அ. (2)(ஆ) இன் பிரகாரம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக அச்சட்டமூலம் ஒழுங்குப்பத்திரத்திலும் இடம்பெறச் செய்கின்றது. |
| 6 |
அரசியலமைப்பின் உறுப்புரை 154எ. (5)(ஆ) இன் ஒன்பதாவது அட்டவணையான ஒருங்கியை நிரலில் உள்ள ஏதேனும் உத்தேச நியதிச்சட்டமொன்று பாராளுமன்றத்துக்குக் கிடைக்கும்போது, சட்டமூல அலுவலகம் அது பற்றிப் பாராளுமன்றத்தில் அறிவிக்கச் செய்து நிலையியற் கட்டளை 46 அ. (3)(அ) இன் பிரகாரம் அச்சட்டமூலம் நிலையியற் குழுவுக்கு அநுப்பப்படும்போது அதனைக் கையாள்கிறது. (நிலையியற் குழுவின் நடவடிக்கை முறை பற்றி மேலும் விபரங்களுக்கு 3 ஆம் பந்தியைப் பார்க்கவும்.) அந்நியதிச் சட்டத்தை நிலையியற் குழு பரிசீலித்ததன் பின்னர், சட்டமூல அலுவலகம் அறிக்கையொன்றைத் தயாரித்து மும்மொழிகளிலும் ஒப்பிடுவதுடன் அதனை அச்சிடச் செய்து பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிப்பதுடன் நிலையியற் கட்டளை 46அ. (3)(ஆ) இன் பிரகாரம் சம்பந்தப்பட்ட மாகாண சபைக்கும் அநுப்பி வைக்கும். |
| 7 |
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் பொறுத்த வரை, வரவுசெலவுத் திட்ட உரையை உடனடுத்துப் பாராளுமன்றத்தினால் நிருணயிக்கப்படும் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய எல்லாத் திருத்தங்களையும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறு பாராளுமன்றத்தில் செய்யப்பட வேண்டிய அறிவித்தலொன்றைச் சட்டமூல அலுவலகம் தயார் செய்யும். |
| இரண்டாம் மதிப்பீடு |
| 8 | மேலே 1.1 முதல் 1.7 வரையான பந்திகளில் குறிப்பிடப்பட்டவாறு முதலாம் மதிப்பீடு முடிவடைந்ததும் அச்சட்டமூலங்கள் இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டு நிலையியற் கட்டளை 52 இன் பிரகாரம் முழுப் பாராளுமன்றக் குழுவுக்கு அல்லது தெரிகுழுவொன்றுக்கு அல்லது நிலையியற் குழுவொன்றுக்கு ஆற்றுப்படுத்தப்படும். சட்டமூலமொன்று தெரிகுழுவொன்றுக்கு அல்லது நிலையியற் குழுவொன்றுக்கு ஆற்றுப்படுத்தப்படும்போது, நிலையியற் கட்டளை 63, 64 மற்றும் 65 என்பவற்றின் பிரகாரம் குழு பாராளுமன்ற சபாபீடத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்ததன் பின்னர் மட்டுமே சட்டமூலம் பரிசீலிக்கப்படும். சட்டமூலங்கள் ஆற்றுப்படுத்தப்படும் தெரிகுழுக்களை அல்லது நிலையியற் குழுக்களைப் பாராளுமன்றச் சட்டமூலக்குழு கையாளும். (இக்குழுக்களின் நடவடிக்கை முறை பற்றிய மேலும் விபரங்களுக்கு 3 ஆம் பந்தியைப் பார்க்கவும்.) |
| குழு நிலை |
| 9 | முழுப் பாராளுமன்றக் குழுநிலையின்போது 54 முதல் 61 வரையான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சட்டமூலமொன்றுக்கான திருத்தங்கள் பிரேரிக்கப்படலாம். இந்தத் திருத்தங்கள் மும்மொழிகளிலும் ஒத்திசைகின்றனவா என்பதையும், உறுப்புரைகள் 121 அல்லது 122 இன் கீழான உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் பிரேரிக்கப்படும் திருத்தங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்புடையனவா என்பதையும் சட்டமூல அலுவலகம் சரி பார்க்கும். மேலும் உறுப்புரை 77 மற்றும் நிலையியற் கட்டளை 38(2) என்பவற்றின் பிரகாரம் இந்தத் திருத்தங்கள் தொடர்பான சட்டத்துறைத் தலைமை அதிபதியின் சான்றுரை பெறப்பட்டுள்ளதை நிச்சயப்படுத்துவதும் சட்டமூலப் பிரிவின் கடமையாகும். |
| மூன்றாம் மதிப்பீடு |
| 10 | நிலையியற் கட்டளைகள் 66 மற்றம் 67 என்பவற்றின் பிரகாரம் முழுப் பாராளுமன்றக் குழுவின் மூலம் சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட்டதும் அல்லது தெரிகுழுவின் அல்லது நிலையியற் குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டதும் சட்டமூல அலுவலகம் குழுக்களில் பிரேரிக்கப்பட்ட திருத்தங்கள் ஏதேனுமிருப்பின் அவற்றைத் தகுந்த முறையில் உட்புகுத்தி, மும்மொழிகளிலும் ஒப்பிட்டு வரைவு ஒப்பளிப்புப் பிரதியை (சிங்களம் மற்றும் தமிழ்) அச்சிடும். வரைவு ஒப்பளிப்புப் பிரதி சட்ட வரைஞரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இறுதி ஒப்பளிப்புப் பிரதிகள் அச்சிடப்பட்டு உறுப்புரை 79 அல்லது 80 இன் பிரகாரம் செயலாளர் நாயகத்தினூடாகச் சபாநாயகரின் சான்றுரைக்கு அல்லது சனாதிபதிக்கு, சந்தர்ப்பத்துக்கேற்றவாறு அநுப்பி வைக்கப்படும். |
| இறுதிச் சட்டப் பிரதிகளை அச்சிடல் |
| 11 | சட்டமூலத்தின் சான்றுரையை கௌரவ சபாநாயகர் எழுதிய பின்னர் அது இறுதிச் சட்டப் பிரதிகளை மும்மொழிகளிலும் அச்சிடுவதற்கு, அரசாங்க அச்சகருக்கு அநுப்பி வைக்கப்படும். |