பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் நிறுவனக் கட்டமைப்பில் சகல பதவிகளும் நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என்பதால் இதனை விரைவில் சீர் செய்ய கோபா குழு பணிப்புரை |
திகதி : | 2024-02-02 |
பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் 2021, 2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகையை ஆராயும் நோக்கில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் 24.01.2024ஆம் திதிகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் நிறுவனக் கட்டமைப்பில் சகல பதவிகளும் நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என்பதால் இதனை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோபா குழு பரிந்துரைத்தது.
இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
நியாயமாகவும், வெளிப்படையாகவும், அனைவருக்கும் சமமாகவும் பொதுமக்கள் சேவையை முன்னெடுத்துச் செல்ல, வினைத்திறனாக, ஒழுக்கமாக மற்றும் திருப்தியான சேவையை நிறுவுதல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் நிறுவனக் கட்டமைப்பில் ஒரு மட்டத்தைக் கொண்ட அதிகாரிகள் மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்வது இந்த ஆணைக்குழுவின் நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற செயற்பாட்டுக்குத் தடையாக இருக்கலாம் என்பது இந்தக் குழுவின் கருத்தாக இருந்தது.
எனவே, இந்த நிலைமைய நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தது.
மேலும், பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் காணப்படும் விடயம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்போது திணைக்களங்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கே இருப்பதாகவும், அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் கௌரவ ஜனாதிபதிக்கு இருப்பதால் விளக்கமளிப்பது தொடர்பில் அழைப்பு விடுக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென ஆணைக்குழுவின் அதிகாரிகள் பதிலளித்தனர்.
முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாவிட்டால், ஆணைக்குழுவொன்று அவ்வாறு செயற்படும் வகையில் இருப்பது சிக்கல் நிறைந்தது என்றும், இந்த விடயத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழு அதிகாரிகளை வலியுறுத்தியது.
இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் கூடிய இக்குழுவின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ டயானா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தனாயக, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ சாரதி துஷ்மந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








