செங்கமுவ காடழிப்பு தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு |
திகதி : | 2024-01-31 |
செங்கமுவ காடழிப்பு மற்றும் அப்பகுதியின் தற்போதைய நிலைமை குறித்து, சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் (ஜன. 24) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும, எந்தவொரு நாட்டிலும் மூன்றில் ஒரு பங்கு நிலம் வனப்பிரதேசமாக இருக்க வேண்டும் எனவும், இலங்கையில் காடுகளின் எண்ணிக்கை இனங்காணப்பட்டுள்ளதா என்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், தற்போது காடுகள் அழிக்கப்படுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வனப்பிரதேச காணிகளை அபகரிப்பதற்காக சட்டவிரோத அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலக் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்ததுடன் இது தொடர்பில் விளக்கமளித்த அதிகாரிகள் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாண சபையினால் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு மேலதிகமாக காணி உத்தியோகத்தர்களுக்கும் அனுமதிப்பத்திரத்தில் கையொப்பமிட அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனை சட்டவிரோத அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்குத் தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். அதற்கமைய, சட்ட விரோத அனுமதிகளை பெயரிட்டு அடுத்த குழு அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குப் பரிந்துரைத்தார்.
அம்பாறை மாவட்ட வன அதிகாரி ஆர்.எம். விஜேபால குறிப்பிடுகையில், செங்கமுவ வனப்பகுதியில் 806 ஹெக்டேயர் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு பிரதேச செயலாளருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த வனப்பகுதியின் எல்லைகள் இடப்பட்டுள்ளதாகவும், எனினும் காடுகளை சுத்தப்படுத்துதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய, செங்கமுவ வனப்பகுதி குறித்து மூன்று பகுதிகளாக குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதில் முதலாவதாக நிலப் பயன்பாடு தொடர்பான பகுதியில் எல்லைகளை அமைத்து, எஞ்சியுள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றுதல், இரண்டாவது, பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்படும் வனப்பகுதியில் வசிக்கும் மக்களை அகற்றி, அந்த நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் மூன்றாவதாக தற்போது அழிந்து வரும் பகுதியைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்தல் என்பனவாகும்.
செங்கமுவ காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகளைக் இறுதியாகக் குழு தீர்மானித்ததுடன், காடுகளைச் சுத்தம் செய்தல் தொடர்பில் கண்காணிப்பதற்கு முப்படையினரின் ஆதரவைப் பெரும்வகையிலான பரிந்துரையை சுற்றுநிருபத்தில் உள்ளடக்கி, அதனை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும பரிந்துரை வழங்கினார்.
அத்துடன், குழு உறுப்பினர் கௌரவ சி.பி.ரத்நாயக்கவினால் வழங்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், பன்றி மான் (Hog deer) மற்றும் அந்த வகை விலங்கைப் பாதுகாப்பது தொடர்பிலும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்த மான் இனம் அழிவுக்கு உள்ளாகிவரும் இனம் அல்ல என்றும், எனினும் இவை இறைச்சியாகப் பெறப்படும் அச்சுறுத்தல் உள்ளதால் தற்போதுள்ள தொகை குறைந்திருந்தாலும் இந்த மான் இனம் வேகமாகப் பெருகக்கூடியவை என நிபுணர்கள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, தற்போது இந்த மான் இனத்திற்குக் காணப்படும் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கு மக்களை விழிப்பூட்டுவதற்கும், இந்த மான் இனத்தின் வாழ்விடத்தை வரைபடமாக்குவதற்கும், இந்த மான் இனத்தை அது இருக்கும் பகுதிகளிலும், வெளிப்பகுதியிலும் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, செம்பட்டியலில் (Red list) குறிப்பிட்டுள்ள அழிந்து வரும் இலங்கை வனவிலங்குகள் தொடர்பில் மேலும் ஆய்வு செய்து, அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதற்கும், அடுத்த குழுக் கூட்டத்தில் இது குறித்துக் கலந்துரையாடுவதற்கும் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ துஷார இந்துனில் அமரசேன மற்றும் கௌரவ (வைத்திய கலாநிதி) திலக் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








