இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையில் காப்புறுதித்துறையை சாதகமான பாதையில் முன்கொண்டு செல்வதற்கான முன்மொழிவுகளைத் தயாரிக்க திறைசேரியின் பிரதிச் செயலாளர் தலைமையில் விசேட குழு – பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தீர்மானம்

திகதி : 2024-01-18

இலங்கையில் காப்புறுதித் துறையை ஒரு நேர்மறையான பாதையில் முன்கொண்டு செல்வதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க திறைசேரியின் பிரதிச் செயலாளர்  தலைமையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு  பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் அண்மையில் (ஜன. 11) கூடிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தப் புதிய குழுவில் காப்புறுதித்துறையுடன் தொடர்புபட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, இலங்கை பொலிஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

நிதித்துறையில் மிக முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும் இலங்கையின் காப்புறுதித் துறை ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதாகவும், அதனை மேலும் சாதகமான முறையில் விரிவுபடுத்த வேண்டுமெனவும் குழுவின் தலைவர் கௌரவ காமினி வலேபொட சுட்டிக்காட்டினார். உலகின் பல நாடுகளில் உள்ளதைப் போன்று இலங்கையிலும் காப்புறுதித் துறையானது மக்களைக் கவரும் வகையிலும், மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மையளிக்கும் வகையிலும் மிகவும் கவர்ச்சி மிக்க வர்த்தகமாக மாற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

அதன்படி, இலங்கையில் காப்புறுதித் துறையில் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சாதகமான நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டமொன்று இத்துறையுடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட வேண்டுமெனவும், இதற்கான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது இந்தக் குழுவின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கான காப்புறுதி உரிமைகோரல்களைச் செலுத்தும்போது அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளைத் தடுக்கும் வகையில் காப்புறுதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையொன்று வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது. காப்புறுதி விகிதங்களை நிர்ணயிப்பதிலும், சலுகைகளை வழங்குவதிலும் பல அநீதிகள் பதிவாகியிருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கொவிட் காலத்தில் வாகனக் காப்புறுதி மற்றும் காப்புறுதி பலன்களை வழங்குவது சுமார் 80% குறைந்ததாகவும், இதனால் அந்தக் காலகட்டத்தில் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டியுள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இதனால் இந்நாட்டில் காப்புறுதி துறையில் நிலவும் குறைபாடுகளை சரிசெய்வதற்கும், மக்கள் பெற்றுக் கொள்ளும் நன்மைகளை அதிகரிப்பதற்கும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

காப்புறுதித் துறையின் கொள்கைகள் மற்றும் சட்டங்களின் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட சீர்திருத்தங்கள் குறித்த உண்மைகளை காப்புறுதித் துறையின் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர். எனவே, நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகளின்படி, எதிர்காலத்தில் காப்புறுதித் துறையின் முன்னேற்றம் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிமல் லான்சா, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ நாளக கோட்டேகொட, கௌரவ சஹான் பிரதீப் விதான, கௌரவ எச்.எம். தர்மசேன மற்றும் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom