இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சரியான பொருளாதாரக் கொள்கைகள் இருந்தால் 10 வருடத்துக்குள் இந்நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்

திகதி : 2023-08-03

சரியான பொருளாதாரக் கொள்கை இருந்தால் 10 வருடங்களுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாகர காரியவசம் தலைமையில் அண்மையில் (ஆக. 02) கூடியது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தக் குழுவிற்கான கருத்துக்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருளாதாரத் துறை நிபுணர்கள் அழைக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவின் முன்னிலையில் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிடுகையில், இந்த நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை அதிகரிப்பது அவசியம் எனவும் அதற்கான கொள்கைகளைத் தயாரிப்பது முக்கியம் எனவும் தெரிவித்தார். உதாரணமாக, வியட்நாமில் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டில் சேவைப் பொருளாதாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்குள் ஈர்ப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது எனவும் சிரேஷ்ட பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

1960கள் உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சுறுசுறுப்பான காலகட்டம் என்றும், கணினியின் அறிமுகத்துடன் உலக வர்த்தகம் விரிவடைந்தது என்றும் அவர் விளக்கினார். மேலும், கொவிட் காலத்தில், நாட்டின் ஏற்றுமதிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய பேராசிரியர், நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதற்கும், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் இந்தக் காலகட்டத்தில் பணம் அச்சிடப்பட வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,  70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது மத்திய வங்கியின் தலையீட்டால் சுமார் 10% வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார். அது மாத்திரமன்றி வேலையின்மை வீதம் அதிகரித்திருக்கின்றபோதும் அது குறித்து சரியான கணக்கெடுப்புக்கள் இல்லையென்றும் கூறினார்.
இங்கு உரையாற்றிய களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் திஸாநாயக்க குறிப்பிடுகையில், உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு சரியான பொறிமுறையொன்று இல்லையெனச் சுட்டிக்காட்டினார். பொருளாதாரம் தொடர்பில் நிரந்தரமான தேசியக் கொள்கையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரக் கொள்கையும் அரசியல் கொள்கையும் குழப்பிக் கொண்டுள்ளதாக வயம்ப பல்கலைக்கழக பேராசிரியர் அமிந்த பெரேரா சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக நாட்டுக்கு சுதந்திரமான பொருளாதாரக் கொள்கை தேவை என்றும், இதற்கு சிறந்த உதாரணம் இந்தியா என்றும் அந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கை அதன் அரசியல் கொள்கையுடன் பிணைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசன்ன பெரேராவும் தனது கருத்துக்களைத் தெரிவித்து 5 விடயங்களை விளக்கியதுடன், இந்தக் குழுவிற்கு எழுத்து மூலம் தனது கருத்துக்களை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

தகவல்களைப் பின்தொடர்வதற்கு இந்த நாட்டில் ஒரு தனியான பிரிவொன்று இல்லை என இங்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிஹால் ஹென்னாயக்க சுட்டிக்காட்டினார். இந்த நாட்டுக்குப் பொருளாதார புலனாய்வு தகவல் பிரிவு முக்கியம் என்பது அவருடைய நிலைப்பாடாக இருந்தது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆதரவையும் இந்தத் துறைக்குப் பெற வேண்டும் என பேராசிரியர் பந்துல ஜயதிலக்க சுட்டிக்காட்டினார். மேலும், பேராசிரியர் சிறிமல் அபேரத்ன, இலங்கையில் கடன் நிலைத்தன்மை மற்றும் முதலீடுகளைப் பெறுதல் குறித்து விளக்கினார். குறிப்பாக முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரும்போது தேவையான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்தக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட மற்றும் கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

9 6

13 16

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom