பாரிய அளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய வரித் தொகையை வசூலிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே |
திகதி : | 2023-06-23 |
- மதுபான உற்பத்தி நிறுவனங்களில் சகல மதுபான போதல்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படுகின்றதா என்பதை சோதனையிடுவதற்கு பொறிமுறையொன்றைத் தயாரிக்க அறிவுறுத்தல்
- மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தப் பணிப்புரை
- மதுபான உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் மதுவரித் திணைக்களத்துடன் இணைந்த அதிகாரிகளுக்கு உரிய காலத்துக்கு இடமாற்றம் வழங்க அறிவுறுத்தல்
- மதுவரித் திணைக்களம் வினைத்திறனாக செயற்படுவதற்குத் தேவையான இடைநிறுத்தப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்து குழுவுக்குத் தெளிவுபடுத்தப் பணிப்புரை
பாரிய அளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய வரிகளை உடனடியாக வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவுறுத்தல் வழங்கினார்.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் அண்மையில் கூடியபோதே மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்த வருடத்தில் மதுவரித் திணைக்களம் எதிர்பார்த்துள்ள வருமானம் 217 பில்லியன் ரூபா என்றும், ஜூன் மாதம் வரையில் 72.985 பில்யலின் ரூபா மாத்திரம் ஈட்டப்பட்டிருப்பதாகக் குழுவின் தலைவர் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினர். இதற்கு அமைய இவ்வருட இலக்கை குறித்த திணைக்களத்தினால் எட்ட முடியாது என்றும் தெரிவித்தார்.
மதுபானங்களின் விலை அதிகரிப்பால் மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்துள்ளதாக இங்கு வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது என அதிகாரிகள் தரவுகளுடன் சுட்டிக்காட்டினர்.
பல வருடங்களாக மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அதிகரிக்கப்படவில்லையென குழுவின் தலைவர் தெரிவித்தார். இதன்காரணமாக மதுபானத்தின் விலை உயர்வினால் மட்டும் வருமானம் குறைந்துள்ளதாக அவதானிக்கப்படவில்லை. எனவே, இந்நாட்டில் உள்ள பாரிய அளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வரி வசூலிக்கப்பட வேண்டும். எந்த வகையிலும் வரி செலுத்தத் தவறும் உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை இரத்துச் செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
அத்துடன், இலங்கை மதுவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிறுவனம் 110 வருட வரலாற்றைக் கொண்ட நிறுவனம் என்றும், இதனை இன்னமும் டிஜிட்டல் மயமாக்கப்படாமல் இருப்பது பலவீனம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மதுபான தொழிற்சாலைகளில் உள்ள ஒவ்வொரு மதுபானப் போட்டில்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.ஸ்டிக்கர் இல்லாத மதுபானப் போத்தல்கள் சந்தைக்கு வெளியிடப்படும் போக்குக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. அதேநேரம், ஸ்டிக்கர்கள் இன்றி மதுபானம் விற்பனை செய்யப்படும் மதுபான நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். மேலும், மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் அளவையும், தொழிற்சாலைகளில் இருந்து விநியோகிக்கப்படும் போத்தல்களின் அளவையும் சரிபார்த்து முறைகேடுகள் நடைபெற்றால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மதுபான உற்பத்தி நிலையங்களில் கடமையாற்றும் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் நீண்டகாலமாக அந்த நிறுவனங்களில் பணிபுரிவதால் ஊழல், முறைகேடுகள் நடைபெறுவது அவதானிக்கப்படுவதாகவும், இதற்காக முறைமையொன்றை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த அதிகாரிகளை அவ்வப்போறு இடமாற்றம் செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மதுவரித் துறையின் வினைத்திறனை அதிகரிக்க தேவையான, பாதியில் நிறுத்தப்பட்ட சட்ட ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
இதன்படி, கலந்துரையாடப்பட்ட இந்த விடயங்கள் தொடர்பிலும், இலங்கையின் மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ குணதிலக்க ராஜபக்ஷ, கௌரவ நிபுண ரணவக்க, கௌரவ சுதத் மஞ்சு ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








