இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஆம் ஆண்டில் 3.4 பில்லியன் ரூபாய் செலவு செய்து கல்வி அமைச்சு கொள்வனவு செய்த டப் கணினிகள் மற்றும் சார்ஜிங் ரக் என்பன வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படவில்லை என கோபா குழுவில் புலப்பட்டது

திகதி : 2023-06-23

  • கல்வி முகாமைத்துவ தரவுக் கட்டமைப்புக்காக (NEMIS) 2013 மற்றும் 2014 இல் 64 மில்லியன் ரூபாய் செலவு செய்திருந்தாலும் போதுமான அளவு தரவுகள் அதில் உள்வாங்கப்படவில்லை என்பது இனங்காணப்பட்டது
  • உயர்கல்வி மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரும் விகிதாசாரம் குறைந்த அளவில் உள்ளமை தொடர்பில் கவனம்
  • இனங்காணப்பட்ட கடமை இன்றி பிரான்ஸ், பரிஸ் நகரிலுள்ள யுனெஸ்கோ அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் ஒருவரை நியமித்து 13 வருடங்களாக 60,639,544 ரூபாய் வழங்கியுள்ளமை தொடர்பில் கவனம்
  • பிரிவெனாக்கள் கல்வியில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் கவனம்

 

உயர்தரப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக 2019 ஆம் ஆண்டு 3.4 பில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட டப் கணினிகள் மற்றும் சார்ஜிங் ரக் என்பன வினைத்திறனாக பயன்படுத்தப்படவில்லை என கோபா குழுவில் புலப்பட்டது.

கல்வி அமைச்சின் 2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றய குழு (கோபா) இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (ஜூன் 20) பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் புலப்பட்டது.

ஒரு சில டப் கணினிகளின் உத்தரவாதக் காலம் முடிவடையும் வரையிலும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது இதன்போது புலப்பட்டது. அத்துடன் தற்பொழுது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள டப் கணினிகளில் அதிகமானவை செயலற்றதாக இருப்பதும் சிலவற்றைக் காணவில்லை என்பதும் இதன்போது புலப்பட்டது. மேலும் இந்த டப் கணினிகள் நியாயமான வகையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதும் இதன்போது புலப்பட்டது.

அதற்கமைய, செப்டெம்பர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான முழுமையான விபரங்களடங்கிய அறிக்கையினை கோபா குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது.

கல்வி முகாமைத்துவ தரவுக் கட்டமைப்புக்காக (NEMIS) 2013 மற்றும் 2014 இல் 64 மில்லியன் செலவு செய்திருந்தாலும் போதுமான அளவு தரவுகள் அதில் உள்வாங்கப்படவில்லை என்பது இனங்காணப்பட்டது. இதில் ஆசிரியர்கள் தொடர்பான தரவுகள் காணப்படுவதாகவும், மாணவர்கள் தொடர்பான தரவுகள் பிறிதொரு கட்டமைப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள்  தெரிவித்தனர். அத்துடன், இந்தக் கட்டமைப்பு இற்றைப்படுத்தப்படுவதில் பலவீனம் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதில் காணப்படும் தரவுகள் போதுமான அளவு இல்லை என கோபா குழு சுட்டிக்காட்டியது. இதனால், இது தொடர்பில் விரிவாகக் கண்டறிய ஜூலை 07 ஆம் திகதி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கோபா குழு முன்னிலையில் அழைப்பதாக குழு அறிவித்தது.

அத்துடன், உயர்கல்வி மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரும் விகிதாசாரம் குறைந்த அளவில் உள்ளமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் 2020 ஆம் ஆண்டில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு 15 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தற்பொழுது காணப்படும் நிலைமை இதற்கு மாறானதாக உள்ளதால் இந்தப் பரிந்துரைகள் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என குழு அறிவித்தது.  

இனங்காணப்பட்ட கடமை இன்றி பிரான்ஸ், பரிஸ் நகரிலுள்ள யுனெஸ்கோ அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் ஒருவரை நியமித்து 2007 முதல் 2021 வரை 13 வருடங்களாக 60,639,544 ரூபாய் வழங்கியுள்ளமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் இந்தக் கட்டணம் அமைச்சரவை அனுமதியொன்றின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கமைய, இந்தப் பதவி 2021 டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் 2022 ஜனவரி 25 ஆம் திகதி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்தப் பதவியை இரத்துச் செய்தமைக்கு எதிராக அந்த அதிகாரி அந்நாட்டு சட்டத்தின் கீழ் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் நஷ்டஈடாக 30898.56 யூரோ கோரியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைய, இது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் கோபா குழுவுக்கு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.

அத்துடன் பிரிவெனாக்கள் கல்வியில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் தேசிய கல்விக் கொள்கையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பிரசன்ன  ரணவீர, கௌரவ கே. காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ முதிதா பிரசாந்தி மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 5

8

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom