ஊடகவியலாளர் சந்திப்பு காரணமாக கணக்காய்வாளர் நாயகம் மற்றும் கோப் குழு தொடர்பில் தவறான கருத்து பரப்பப்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கோப் முன்னிலையில் தெரிவிப்பு |
திகதி : | 2023-06-14 |
- அமைச்சரவைப் பத்திரம் மூலம் சட்டத்தை திருத்துவதற்கு அதிகாரத்தைப் பெறுவதற்கு இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை
- அனுமதிப்பத்திரம் வழங்கும் சிக்கலான முறையமைக்குப் பதிலாக மனிதாபிமானம் கொண்ட புதிய முறைமையை அமைக்குமாறு பணிப்புரை
- அகழ்வு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தட்ட காலவரையறை தொடர்பில் முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களில் வழங்குமாறும் அறிவுறுத்தல்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்றுக் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அழைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, இந்தக் கூட்டத்துக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் ஆர். சஞ்சீபன் மற்றும் பணிப்பாளர் நாயகம் (பதில்) எம்.எம்.ஜே.பீ. அஜித் பிரேமா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தி கோப் குழு தொடர்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது பரிசீலிக்கப்பட்டது. கோப் குழுவை விமர்சிக்கும் எண்ணம் தமக்கு இருக்கவில்லை என்றும், ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் எந்தவொரு நபரையோ அல்லது நிறுவனத்தையோ இலக்காகக் கொண்டதல்ல எனவும், குழு தனது அதிகாரங்களுக்கு அமைய செயற்படுவதாகவும் இதன்போது கோப் குழுவின் தலைவரினால் சுட்டிக்காட்டப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தையோ அல்லது கோப் குழுவையோ விமர்சிப்பதன் மூலம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது எனவும், இது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல், அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்தல், கணக்காய்வாளர் நாயகத்தின் வினவல்களிலிருந்து அவதானிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு இதன்போது பணியகத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அனுமதிப்பத்திரங்கள் வழங்கும்போது சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களின் அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக பணியகத்தின் தலைவர் தெரிவித்தார். மாவட்ட அலுவலகங்கள் மூலம் அனுமத்திரம் வழங்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, இறுதி அனுமதிக்காக பணிப்பளார் நாயகத்துக்கு அனுப்புவதாகவும், தகவலுக்காக மாத்திரமே அமைச்சருக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சின் சட்ட அதிகாரியொருவர் இல்லை என்பதால் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் போது, மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட பின்னரான விடயங்கள் தடைப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் சட்ட அதிகாரி ஒருவரை அமைச்சுக்கு நியமிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சின் செயலாளருக்கு குழு ஆலோசனை வழங்கியது.
அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தட்ட காலவரையறை தொடர்பிலும் அவை செயலற்றுக் காணப்படுவதாயின் அவை தொடர்பிலும் முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களில் வழங்குமாறும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்த சிக்கல்களை தீர்ப்பதற்குப் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய அமைச்சரவைப் பத்திரம் மூலம் சட்டத்தை திருத்துவதற்கு அதிகாரத்தைப் பெறுவதற்கு இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுத்து, அதனை அறிவிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.
அத்துடன், அனுமதிப்பத்திரம் வழங்கும் சிக்கலான முறையமைக்குப் பதிலாக மனிதாபிமானம் கொண்ட புதிய முறைமையை அமைக்குமாறு பணிப்புரை குழுவின் தலைவர் பணிப்புரை வழங்கினார்.
ஒரு சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கனிம ஏற்றுமதிக்கான அகழ்வு அனுமதிப் பத்திரங்களை பணியகம் மற்றும் செயலாளருக்கு அறிவிக்காமல் மாற்றப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இதன்போது தெரியவந்தது. இவ்வாறான அனுமதிப்பத்திரத்தை 89 மில்லியன் டொலர்களுக்கு வேறு தரப்பினருக்கு விற்பனை செய்த சந்தர்ப்பம் காணப்படுவதாக பணியகத்தின் தலைவர் தெரிவித்தார். இந்தத் தகவலை உடனடியாகக் கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்குமாறு குழு அறிவுறுத்தியது.
பணியகத்துடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து அதன் பணிகளை மேற்பார்வையிட வேண்டியதன் அவசியத்தை செயலாளருக்கு குழு வலியுறுத்தியது. அத்துடன், புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக கடந்த கோப் குழுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட உப குழுவினால் மேற்கொள்ளப்படும் எனவும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மஹிந்தானத்த அலுத்கமகே மற்றும் கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









