இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிக்கல்கள் பல கோபா குழுவில் புலப்பட்டன

திகதி : 2023-06-14

  • சர்வதேச தரங்களுக்கு அமைய புதிய சட்டமொன்றை தயாரிக்குமாறு பணிப்புரை
  • சிறைச்சாலைகளில் நெருக்கடி 250% ஆக உயர்வு
  • பணியாளர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு ஆலோசனை
  • பகுப்பாய்வாளர் அறிக்கையை விரைவுபடுத்துவதன் அவசியம் தொடர்பில் கவனம்

 

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிக்கல்கள் பல இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (ஜூன் 09) கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) புலப்பட்டது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தை ஸ்தாபிப்பதற்காக தற்போதுள்ள சட்டமூலத்திற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு அமைவாக புதிய சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு கடந்த கோபா குழுக் கூட்டத்தில் பரிந்துரைத்த போதிலும் அந்தப்பணி தாமதமானது குறித்து குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதன்படி, இப்பணிகளை முடிப்பது குறித்து குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய அறிக்கையை ஜூலை 10 ஆம் திகதிக்குள் வழங்குமாறு குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

சிறைச்சாலைகளின் கொள்ளளவு அதிகரித்துள்ளதாகவும் சராசரியாக இந்த எண்ணிக்கை 259% எனவும் சில சிறைச்சாலைகளில் இந்த எண்ணிக்கை 300%-400% வரை அதிகரித்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். அதன்படி, சிறைச்சாலைகளில் 11,762 கைதிகளுக்கு மட்டுமே இடமிருந்தாலும், தற்போது 26,791 பேர் சிறைச்சாலையில் இருப்பதாக நீதியமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்தார்.

இவர்களில் 17,502 பேர் விளக்கமறியல் கைதிகள் என்றும், அவர்களில் 10,470 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் எனவும் இதன்போது புலப்பட்டது. மேலும், நீதிமன்றினால் குற்றவாளிகளாக தண்டனை விதிக்கப்பட்ட 9,289 பேர் உள்ளதாகவும் அவர்களில் 3,569 பேர் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இவர்களில் 1,309 பேர் அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

வெசாக் பொசன் போன்ற காலங்களில் அபராதம் செலுத்த முடியாதவர்கள் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டாலும், குறுகிய காலத்தில் மீண்டும் குற்றவாளிகளாக சிறைத்தண்டனைக்குட்படுவது பாரிய பிரச்சினையாக உள்ளதாக சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

தற்பொழுது போதைப்பொருளுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்தது. அதற்கமைய, புதிதாக 9 மையங்களில் புனர்வாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை கட்டுப்படுத்த தேவையான முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களை விரைவாக தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்குக் குழு  அறிவித்தது.

அத்துடன், மொத்தம் 7,872 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் 1,663 பணியிடங்கள் வெற்றிடமாக  உள்ளதாகவும் தெரிய வந்தது. இந்த வெற்றிடங்களை நிரப்புமாறும், பணியாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு தேவைப்பட்டால் அது தொடர்பான திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் கோபா குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

சிறைச்சாலையில் காணப்படும் உடல்கள், பொருட்கள் மற்றும் பைகளை சோதனை செய்யப் பயன்படுத்தப்படும் 11 இயந்திரங்களில் 4 இயந்திரங்கள் பாவனையில் இல்லை என்பதும் இதன்போது தெரியவந்தது. இந்த இயந்திரங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை என்பதால் பழுதுபார்க்கும் செலவை விட புதிய இயந்திரங்களை வாங்குவது இலாபகரமானது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, அனைத்து சிறைச்சாலைகளுக்கும் தேவையான இயந்திரங்கள் தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிறைச்சாலையில் தொலைபேசி சமிஞைகள் செயலிழக்கச் செய்யும் 'ஜாமர்' கருவியால், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சமிஞைகள் செயல்படாமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. தற்போது இராணுவத்தின் சமிக்ஞைப் படையினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட பகுதிக்கு மாத்திரம் மிகவும் துல்லியமாக செயற்படும் தொழில்நுட்பம் தற்போது அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினருடனும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு குழுவினால்  அறிவுறுத்தப்பட்டது.

பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பெரும்பான்மையான விஞ்ஞான உத்தியோகத்தர்கள் வெளிநாடு சென்றுள்ளதால் 25 வெற்றிடங்கள் காணப்படுவதாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் தீபிகா செனவிரத்ன இதன்போது தெரிவித்தார். எனினும் வழங்கப்பட வேண்டிய அறிக்கைகளின் தொகை 3,944 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு எஞ்சிய தொகையை விரைவில் நிறைவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், ஒரு மாதத்திற்கு 1200-1500 அறிக்கைகள் வழங்கப்பட்டன எனவும், ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு 2500 க்கும் அதிகமான அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்படுவாகவும் அவர் குறிப்பிட்டார். அவற்றில் அதிக எண்ணிக்கையில் போதைப்பொருள் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்களை நிரப்பி, இதனை ஒரு சிறப்புப் பணியாகக் கருதி விரைவாக நிறைவு செய்யுமாறு குழு அறிவுறுத்தியது.

அதற்கு மேலதிகமாக, சிறைத் திணைக்களம் தொடர்பான துல்லியமான கணினித் தரவு அமைப்பை உருவாக்குவதன் அவசியம், கொள்முதல் நடவடிக்கைகளின் போது கைதிகளுக்கு உணவு வழங்குவதற்கு யதார்த்தமற்ற விலையைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தைப் பெற்று பின்னர் உணவின் தரத்தை குறைப்பது போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டயனா கமகே, கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ நிரோஷான் பெரேரா, கௌரவ விமலவீர திசாநாயக்க,கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ முத்திதா பிரிஷாந்தி ஆகியோரும் குழுவின் அனுமதியுடன் கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்தவும் கலந்துகொண்டனர்.

 

8 3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom