வாகன இறக்குமதியை நிறுத்துதல் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக வரவுசெலவுத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை இலங்கை சுங்கத்துக்கு அடைய முடியாது - இலங்கை சுங்கம் |
திகதி : | 2023-06-13 |
- வாகன இறக்குமதி தொடர்பில் அரசு விரைவில் தீர்மானம் எடுக்கும் - குழுவின் தலைவர் மஹிந்தானந்த அலுத்கமகே
- எந்தளவு இரத்தினக்கல் தொகையாக இருந்தாலும் சுங்கத்தினால் விடுவிப்பதற்கு 200 டொலர் மாத்திரமே தேவை என்பது புலப்பட்டது
- சுங்க வழக்கொன்று நிறைவு பெறுவதற்கு குறிப்பிட்ட காலவரையறை இல்லாமை தொடர்பில் கவனம்
- கொள்கலன் பரிசீலனை செய்யும் முறைமை தொடர்பில் கவனம்
- விமானநிலையத்தில் சேவையிலீடுபடும் சுங்க அதிகாரிகள் பரிசீலனைக்குட்படுத்தப்படாமை தொடர்பில் கவனம்
- உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கதுக்கிடையிலான தொடர்பை அதிகரிப்பது தொடர்பில் கவனம்
வாகன இறக்குமதியை நிறுத்துதல் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டில் வரவுசெலவுத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை இலங்கை சுங்கத்துக்கு அடைய முடியாது என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரச வருமானத்தை அதிகரிப்பதில் இலங்கை சுங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (ஜூன் 08) கூடிய போதே சுங்க அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவித்தனர்.
இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கை சுங்கத்தின் வருமானமாக 1226 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுவதாகவும், எனினும், இந்த 5 மாதங்களில் வெறும் 330 பில்லியன் ரூபா மாத்திரமே கிடைத்துள்ளது என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். இதனால், இந்த வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதி உள்ளிட்ட இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் காணப்படுவதால் இந்த எதிர்பார்ப்பை அடைய முடியாது என வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இவ்வருடம் பெறக்கூடிய வருமானம் 783 பில்லியன் ரூபாவாகும் என அவர்கள் கணித்துள்ளனர். இது தொடர்பில் நிதி அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், சுங்கத்துக்கு கிடைக்கும் வருமானத்தில் சுமார் 20% வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளின் மூலம் கிடைப்பதாகவும், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் வரையில் இந்த எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாது எனவும் அதிகாரிகள் தரவுகளுடன் சுட்டிக்காட்டினர். அத்துடன், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிகூடிய வரி வருமானமாக 2018 ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த வரித் தொகை 923 பில்லியன் ரூபாவாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வருமானத்தில் வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்ட வரிகள் மூலம் 194 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது. இதனால் 3 வருடங்களாக வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுங்கவரி வருமானம் குறைந்துள்ளதாகவும் இம்மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபாவை வாகன இறக்குமதி வரி மூலம் பெற முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், கடனுதவி (Credit line) முறையின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அது நாட்டிலுள்ள வெளிநாட்டு செலாவணி வெளியே செல்லாமல் சுங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு சிறந்த வழியாகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சுங்கத்தின் முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டால், சுமார் 1100 பில்லியன் ரூபா வருமானத்தை அடைய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் அவசர முடிவொன்றை எடுப்பதற்கு செயற்படுவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், இரத்தினக்கல் மற்றும் தங்கம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது பெற்றுக்கொள்ளப்படும் வரி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், எந்தளவு இரத்தினக்கல் தொகையாக இருந்தாலும் சுங்கத்தினால் விடுவிப்பதற்கு 200 டொலர் மாத்திரமே அறவிட முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனால், 2012 க்கு முன்னர் காணப்பட்ட மதிப்பிடப்பட்ட தொகைக்கு வரி அறவிடும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், சுங்கத்தினால் தொடுக்கப்படும் வழக்கொன்று நிறைவு பெறுவதற்கு குறிப்பிட்ட காலவரையறை இல்லாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், நீதி அமைச்சருடன் விரைவில் கலந்துரையாடி இதற்கான முறையைத் தயாரிப்பதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார். நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1200 கொள்கலன்கள் துறைமுக முனையத்தில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், கொள்கலன்களைப் பரிசீலனை செய்யும் முறைமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இறக்குமதி செய்யப்படும் 60% வீதமானவை 'கிறீன் ஏரியா' பகுதியினால் வெளியே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்போது அவை பரிசீலனை செய்யப்படுவதில்லை என்றும் சீனி, உரம், அரிசி போன்றவை இவ்வாறு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த பொருட்களுக்குள் மறைத்து சிகரட், மதுபானம் போன்றவையும் கொண்டுவரப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
விமானநிலையத்தில் சேவையிலீடுபடும் சுங்க அதிகாரிகள் பரிசீலனைக்குட்படுத்தப்படாமை காரணமாக பாரியளவிலான மோசடிகள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக இதன்போது குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் கண்டறிந்து சுங்க அதிகாரிகளை பரிசீலனை செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் கட்டளையொன்றை பிறப்பிக்க சுங்கம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சுங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கும் இலங்கை சுங்கத்திற்கும் இடையிலான தொடர்பை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப அமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் சுங்க அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ விமலவீர திசாநாயக்க, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ நிபுண ரணவக்க மற்றும் கௌரவ சுதத் மஞ்சுள ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










