அசோசியேட்டட் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பில் கோப் குழுவின் கவனம் |
திகதி : | 2023-06-12 |
- அமைச்சின் செயலாளர் நிறுவனத்தின் தலைவராக செயற்படுவது தொடர்பில் கவனம்
- நிறுவனத்தின் கூட்டுத் திட்டத்தைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல்
- மனிதவளத் திட்டத்தை இரண்டு வாரங்களுக்கு சமர்ப்பிக்குமாறு பணிப்புரை
- நிறுவனத்தில் சேவையாற்றாத ஆலோசகர்களுக்கு சம்பளம் வழங்கியமை தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை வழங்கவும்
- நிதி அமைச்சின் சுற்றுநிருபங்களை அமுல்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை - நிறுவனரீதியான மாற்றங்கள் தொடர்பில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் பரிந்துரைகள் கோரல்
- பத்திரிகை கட்டுரையொன்று தொடர்பான வழக்கில் ரூ. 500 மில்லியன் செலுத்த உத்தரவிட்ட சம்பவம் குறித்த அறிக்கை
- 14 மில்லியன் நிதி மோசடி செய்த முன்னாள் சந்தைப்படுத்தல் பிரதானிக்கு 2.5 மில்லியயன் பணிக்கொடை வழங்கியமை தொடர்பில் முழுமையான விசாரணை
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.06.08 ஆம் திகதி கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் (கோப்) கூட்டத்தில் அசோசியேட்டட் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் (ANCL) நிறுவனத்தின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சின் செயலாளர் நிறுவனத்தின் தலைவராக செயற்படுவது தொடர்பில் கவனம்
வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அசோசியேட்டட் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராக செயற்படுவது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் இதன்போது வினவினார். நிறுவனத்தின் தலைவர் சம்பந்தப்பட்ட அமைச்சின் பிரதான கணக்கு அதிகாரியாக செயற்படும் போது அமைச்சின் செயலருக்கு வழங்கப்படும் பணிப்புரைகளை செயற்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்படக்கூடும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விரு நியமனங்களும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதன்படி, இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ANCL நிறுவனத்தின் பிரதான பங்குதாரரான பொது நம்பிக்கைப் பொறுப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிறுவனத்தின் கூட்டுத் திட்டத்தைத் தயாரித்தல்
நிறுவனத்திடம் 2021-2024 வருடங்களுக்கான மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் கூட்டுத் திட்டம் இல்லாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 2018 - 2020 காலப்பகுதியில் மூலோபாயத் திட்டமொன்றுக்கு ரூ. 10 மில்லியன் செலவு செய்யப்பட்டமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, நிருவத்தில் பட்டயக் கணக்காளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் காணப்படுவதால் அவர்களின் பங்களிப்பைப் பெற்று கூட்டுத் திட்டமொன்றைத் தாயாருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
மனிதவளத் திட்டத்தை இரண்டு வாரங்களுக்கு கோப்குழுவில் சமர்ப்பிக்கவும்
நிறுவனத்திலிருந்த சுமார் 1200 பேர் கொண்ட பணியாளர்களை தற்பொழுது 972 வரை குறைத்துள்ளதாகவும், இந்தத் தொகையை 850 ஆகக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரும் ANCL நிறுவனத்தின் தலைவருமான அனுஷ பல்பிட்ட தெரிவித்து.
2017 இல் ஆலோசகர் ஒருவருக்கு ரூ. 3.1 மில்லியன் கொடுப்பனவு வழங்கியுள்ளதுடன், 2022 இன் பின்னர் ஒப்பந்த அடிப்படையில் மனிதவள முகாமைத்துவ திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். அதன்படி, 850 பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தி இவ்வாறு தயாரிக்கப்பட்ட மனிதவள முகாமைத்துவ திட்டத்தை குழுவுக்கு கிடைக்கப்பெறச்செய்யுமாறு கோப் தலைவர் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை வழங்கினார்.
நிறுவனத்தில் சேவையாற்றாத ஆலோசகர்களுக்கு சம்பளம் வழங்கியமை தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை வழங்கவும்
2020 டிசம்பர் 07 ஆம் திகதி ஆலோசகர் ஒருவராக நிறுவனத்தில் இணைத்து ரூ. 1.8 மில்லியன் பணம் செலுத்தியுள்ளமை மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு விடுவிக்கப்பட்ட ஆலோசகர் ஒருவருக்கு, நிறுவனத்துக்கு எந்தவித சேவையையும் பெற்றுக்கொள்ளாது ஆலோசனை கட்டணமாக ரூ. 9 இலட்சம் பணம் செலுத்தியுள்ளமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். முன்னாள் அமைச்சர் ஒருவரின் பரிந்துரைக்கு அமைய இது மேகொள்ளப்பட்டுள்ளதாக இதன்போது புலப்பட்டதுடன் இதற்கு பணிப்பளார் சபை பொறுப்புக்கூற வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், இவ்வாறான தலையீடுகள் இன்றி சுயாதீனமாகச் செயற்படக்கூடிய மனிதவள திட்டத்தைத் தயாரிக்குமாறும் குழுவினால் ஆலோசனை வளர்க்கப்பட்டது. எதிர்காலத்தில் எந்தவிதத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற அனுமதிப்பதில்லை என தற்போதைய தலைவர் உறுதியளித்தார். அதற்கமைய, இது தொடர்பில் உடனடியாகக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயலாளருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.
நிதி அமைச்சின் சுற்றுநிருபங்களை அமுல்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை - நிறுவனரீதியான மாற்றங்கள் தொடர்பில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் பரிந்துரைகள் கோரல்
இந்த நிறுவனத்தை 1973 இல் அரசாங்கத்துக்குக் கையகப்படுத்தும் போது பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் சுற்றுநிருபங்கள் நிறுவனத்துக்குப் பொருந்துமா என்பது தொடர்பில் தெளிவின்மை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறு குழு அறிவித்தது. அத்துடன், இந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான சட்டங்களை தயாரிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிறுவன ரீதியான மாற்றங்கள் எவை என்பது தொடர்பிலும் அறிவிக்குமாறு பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு பரிந்துரை வழங்கப்பட்டது.
பத்திரிகை கட்டுரையொன்று தொடர்பான வழக்கில் ரூ. 500 மில்லியன் செலுத்த உத்தரவிட்ட சம்பவம் குறித்த அறிக்கை
சிலுமின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்று தொடர்பில் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வாதிக்கு 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இந்த வழக்கு 2010 இல் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நிறுவனம் சார்பாக ஆஜராகியிருந்த நிறுவனத்தின் சட்டத்தரணி பிழையான நீதிமன்ற அறையில் இருந்ததால் வாதிக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ. 500 மில்லியன் நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்பொழுது உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது புலப்பட்டது. நிறுவனத்தினால் இந்த சட்டத்தரணிக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் 2020 இல் ஓய்வு பெற்றுள்ளமை புலப்பட்டது. இது தொடர்பில் உடனடியாக சட்ட ஆலோசனை பெற்று எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு வாரத்தில் கோப் குழுவுக்கு அறிவிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை வழங்கினார்.
14 மில்லியன் நிதி மோசடி செய்த முன்னாள் சந்தைப்படுத்தல் பிரதானிக்கு 2.5 மில்லியயன் பணிக்கொடை வழங்கியமை தொடர்பில் முழுமையான விசாரணை
நிறுவனத்தின் முன்னாள் சந்தைப்படுத்தல் பிரதானி 2017 இல் நிறுவனத்துக்கு செய்த ரூ. 14 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் முறையான ஒழுக்க விசாரணையில் குற்றாவளியாகவிருந்தாலும், அவருக்கு பணிக்கொடையாக (gratuity) சுமார் ரூ. 2.5 மில்லியன் நிதி வழங்கியமை தொடர்பில் இதன்போது புலப்பட்டது. இது தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொண்டு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இரண்டு வாரங்களில் குழுவுக்கு அறிவிக்குமாறு கோப் குழு அறிவுறுத்தியது.
செல்லுபடியாகாத காசோலைகளின் சுமார் 22 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொள்வதற்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை
செல்லுபடியாகாத காசோலைகளிலிருந்து சுமார் 22 மில்லியன் ரூபாய் நிறுவனத்துக்கு கிடைக்கவேண்டும் என்பது இதன்போது புலப்பட்டது. இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்குமாறு குழு ஆலோசனை வழங்கியது.
அத்துடன், கணக்காய்வுத் தரங்களுக்கு அமைய மற்றும் பிரதான செயற்பாடுகளை உள்ளடக்கிய வகையில் போதுமான உள்ளகக் கணக்காய்வு இடம்பெறாமை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் விளம்பரம் வெளியிடும் போது இரண்டு வருடங்களுக்கு மேலாக செலுத்தாத 189 நிறுவனங்களின் சுமார் 20 மில்லியன் ரூபாய் நிலுவைகளை பெற்றுக்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், முன்னேற்ற மீளாய்வுக்காக மீண்டும் ஆறு மாதங்களில் வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனத்தை அழைப்பதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








