இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023.06.07 ஆம் திகதி நடைபெற்ற பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்

திகதி : 2023-06-09

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் எந்தப் பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாது

- பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதி

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் செய்யும்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும், எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்றும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்துடன் கலந்துரையாடாமல் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாது எனப் பிரதமரும் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் நியாயமாக இருக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தை ஜூன் 07ஆம் திகதி தலைமையேற்று நடத்தியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தல் காலதாமதம் அடைந்திருப்பதால் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டாலும், சில நிறுவனங்களில் பணிகள் முறையாக நடைபெறாமல் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விவாதிக்கப்பட்டது. மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, தற்காலிக பணிகளை மேற்கொள்வதில், இந்த ஊழியர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இணைப்புகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் அருகிலுள்ள நிறுவனத்திற்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

இந்நிலையை மாற்றுவதற்கு தேவையான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இல்லாவிட்டால், வேட்புமனுவை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள் தமது தேர்தல் பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிடுவதில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இது தொடர்பான சட்டமூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து சட்டமூலம் தொடர்பான பணிகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது உள்ளூராட்சி ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலையிட வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஊடாக பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு மாகாண ஆளுநர்களுக்குப் பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உரிய இடமாற்றங்கள் வழங்கப்படாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தினார். அதன்படி, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.

திஸ்ஸமஹாராம முன்னாள் பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக உடனடி அறிக்கை வரவழைக்கப்பட்டு, தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப இடமாற்றம் கோரப்பட்டதாக கடிதமும் வந்துள்ளமை இங்கு தெரியவந்தது. இவ்வாறான அறிக்கையை வெளியிடுவது நியாயமானதல்ல எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வெயாங்கொடை பிரதேச சபை உள்ளடங்கலாக பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்தும் விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற 85 கோரிக்கைகள் இருப்பதும் தெரியவந்தது. அதன்படி பணிகளை விரைவுபடுத்த தேவையான அறிவுரைகளைப் பிரதமர் வழங்கினார்.

2020 பட்டதாரி பயிலுனர் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதியான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாதவர்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார். கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும் என பிரதமரின் செயலாளர் தலைமையிலான ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுமார் 30,000 பலநோக்கு திணைக்கள ஊழியர்களை தற்போது உள்ள பதவிகளில் அமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன் அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மேலும், பல ஆண்டுகளாக உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு வலியுறுத்தியது. தற்போது இவ்வாறான 9700 பணியாளர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

 

1 2

3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom