இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை (Rating) சரியானதாக இல்லை - வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பல்பிட்ட

திகதி : 2023-05-31

தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை  (Rating) சரியானதாக இல்லை என்றும் அது முறையற்ற விதத்திலும் பக்கச்சார்பான வகையிலும் இடம்பெறுவதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பல்பிட்ட தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தரப்படுத்தலைக் கணக்கிடுவதற்கு எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 தொலைக்காட்சிகளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணம் மூலம் தரவுகளைப் பெறுவதாக அனூஷ பல்பிட்ட மேலும் தெரிவித்தார். இவற்றில் பிரதான ஊடக நிறுவனங்கள் அந்த தரப்படுத்தலைக் கணக்கிடும் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி இந்த உபகரணம் பொருத்தப்பட்டுள்ள சுமார் 300 தொலைக்காட்சிகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனால் பெறப்படும் தரவுகள் சரியானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தனியார் ஊடகங்களை விட அரச ஊடகங்களுக்கு பொறுப்புக்கள் காணப்படுவதாகவும், அலைவரிசை தரப்படுத்தலில் முன்னோக்கி வரவேண்டும் என்ற நோக்கில் மாத்திரம் செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.  

மேலும், ஊடகவியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மிகவும் சுறுசுறுப்பாக செய்திகளை வழங்குவதில் பங்களிக்கும் ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் முறைமை ஒன்றைத் தயாரிப்பது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, இந்தத் திணைக்களத்தின் பிரதான நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ள 18 விடயங்கள் தொடர்பான தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக, வெளிவிவகார அமைச்சின் ஊடாக உள்நாட்டுத் தகவல்கள் வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டுத் தகவல்கள் இந்நாட்டு மக்களுக்கும் வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டம் அமைப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

108 மில்லியன் ரூபாய் செலவில் பிரான்சிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தற்பொழுது பயன்பாட்டில் இல்லாத தொழிநுட்பத்துடன் கூடிய நெகடிவ் மற்றும் பொசிட்டிவ் படச்சுருள் பயன்படுத்தப்படும் உபகரணம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 1999 இல் இந்த உபகரணம் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இந்தத் தொழிநுட்பம் தற்பொழுது கலவாதியாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் இந்த உபகரணம் ஒருமுறை கூடப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அது சீனச்சட்டியினால் தயாரிக்கப்பட்டுள்ளதால் இரும்பிற்கு விற்பனை செய்யவும் முடியாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
     
அதேபோன்று, சுயாதீனத் தொலைக்காட்சி சேவை மற்றும் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பவற்றை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் செயற்பாட்டுத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் என்பன தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டயனா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ ஜே.சி. அலவதுவல, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ எம்.டபிள்யு.டி. பிரதீப் விதான, கௌரவ வீரசுமன வீரசிங்க மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 9

14

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom