இந்நாட்டின் தொழில் பயிற்சிக் கல்வித் துறையில் மூலோபாய அணுகுமுறை |
திகதி : | 2023-05-17 |
தொழில் பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் யாவும் கோப் குழுவுக்கு அழைப்பு
- அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் ஒரே இடத்தில் கூட்டி, ஒருங்கிணைந்து பொதுவான வேலைத்திட்டத்தைத் தயாரிக்கவும் - கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல்- இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் அழைக்கத் தீர்மானம்
- மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு தனது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லையெனக் குற்றச்சாட்டு - உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நிறுவனத்தின் செயலாற்றுகை குறித்த விசேட மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை
- தொழிற்பயிற்சி துறை தொடர்பான நிறுவனக் கட்டமைப்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரவுக் கட்டமைப்பு எதுவும் இல்லை. எனவே, தேசிய தகவல் கட்டமைப்பை விரைவில் தயாரிக்குமாறும் அறிவுறுத்தல்
- தொழில்சந்தைக்கு ஏற்ற வகையில் விஞ்ஞான ரீதியில் பாடநெறிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டது
- தொழில் கல்வி தொடர்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா, விவசாயம் உள்ளிட்ட அமைச்சுக்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த கோப் குழுவினால் உபகுழு
இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கையில் தொழிற்பயிற்சி தொடர்பான அனைத்து நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) கூட்டமொன்று அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (மே 16) நடைபெற்றது.
கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்தவுடன் கோப் குழுவின் தலைவர் நடத்திய கலந்துரையாடல் மற்றும் கோப் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த நிறுவனங்கள் அனைத்தும் அழைக்கப்பட்டன.
இதற்கமைய, கல்வி அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC), தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA), தேசிய இளைஞர் சேவை மன்றம், இளைஞர் படை, சமுத்திரவியல் பல்கலைக்கழகம், வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (UNIVOTEC), தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (NAITA) என்பன இக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன.
இதில், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கௌரவ லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தம்மிக்க பெரேரா, பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க, வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழககத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பிரேமலால்.த சில்வா ஆகியோர் குழுவின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டனர்.
இங்கு கீழ்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து ஒரு பொதுவான திட்டத்தை தயாரிப்பதற்கு செயலாளருக்கு அதிகாரம் வழங்குதல்
அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய தலைவர், இந்த அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் ஒரே இடத்திற்கு அழைத்து, நிறுவனங்களின் நோக்கத்தை உடனடியாக ஒரு திசையில் கையாண்டு பொதுவான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் இரண்டு மாதங்களில் ஆராயப்படும் என்றும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையில் தொழிற்கல்வி தொடர்பான 8 பிரதான நிறுவனங்கள் இருப்பதாகவும், இந்த நிறுவனங்களின் பங்கும் நோக்கங்களும் ஒரே மாதிரியானவை என்றும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். வெவ்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் NVQ நிலைகளின் கீழ் ஒரே பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதால் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் தேவை வலியுறுத்தப்பட்டது.
மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் வகிபாகம் தொடர்பில் சரியான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் தொழிற்பயிற்சி மற்றும் அவை தொடர்பான நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு அதன் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவில்லையென குழு சுட்டிக்காட்டியது. ஆணைக்குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து விசேட மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.
தொழிற்பயிற்சி தொடர்பான செயல்முறை மிகவும் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அதற்குத் தேவையான சட்ட அடிப்படையை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினார்.
நிறுவனக் கட்டமைப்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரவுக் கட்டமைப்பு எதுவும் இல்லை
நிறுவனக் கட்டமைப்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரவுக் கட்டமைப்பு எதுவும் இல்லாமை பாரியதொரு பிரச்சினையாக இங்கு அடையாளம் காணப்பட்டது. 8 முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக, நாடளாவிய ரீதியில் உள்ள கிளைகளின் வலையமைப்பில் இயங்கும் பாடநெறிகள், பதிவுசெய்து வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்களின் எண்ணிக்கை, பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்ற முறையான தரவுக் கட்டமைப்பின் தேவை வலியுறுத்தப்பட்டது.
தொழிற்சந்தைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியில் பாடநெறிகளின் எண்ணிக்கையைக் குறைத்தல்
தொழிற்சந்தை மற்றும் வேலைவாய்ப்புத் தொடர்பில் காணப்படும் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டிய பாடநெறிகள் குறித்து கணக்கொடுப்பொன்றை நடத்துமாறு மூன்றாம்நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கு, கோப் குழு தெரிவித்தது.
இந்தியாவில் 256 தொழிற்பயிற்சி நெறிகள் இருந்தாலும் இலங்கையில் அதனைவிட அதிகமான எண்ணிக்கையான பாடநெறிகள் காணப்படுகின்றமை இங்கு புலப்பட்டது. அதன்படி, தேவையற்ற, காலத்துக்கு ஏற்ற வகையில் மற்றப் பாடநெறிகளை விஞ்ஞான ரீதியில் நீக்குவதற்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
நிறுவனங்களுக்கிடையில் வளப் பகிர்வுக்கான சரியான ஏற்பாடு இல்லாமை
இந்த ஒவ்வொரு நிறுவனமும் நாடளாவிய ரீதியில் கிளை வலையமைப்பைக் கொண்டிருக்கின்றபோதும், இவற்றுக்கிடையில் வளங்களைப் பகிர்வதற்கான முறையான வேலைத்திட்டம் இல்லை என்பது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் கோப் குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், பொதுவாக வளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதன் அடிப்படையில் ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முன்னேற்றம் இரண்டு மாதங்களில் ஆராயப்படும் என்றார்.
வெளிநாடுகளில் உள்ள இதுபோன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட கடந்த காலங்களில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையென்றும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு அறிவித்தது.
பாடநெறிகள் தொடர்பான வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்குதல்
பாடநெறிகளின் தரம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு, தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடர்பான வீடியோ உள்ளடக்கத்தை தயாரித்து இணையம் மூலம் விநியோகிப்பது மிகவும் முக்கியமானது என்று இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பயிற்றுவிப்பாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமையும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. இந்தக் காணொளித் தயாரிப்பிற்குத் தேவையான உதவிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தம்மிக பெரேரா இங்கு உறுதியளித்தார். அதன்படி, அதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்தார்.
அமைச்சுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள உபகுழு
வெளிநாட்டு மொழிகள், சுற்றுலாத் தொழில், விவசாயம் போன்ற பாடங்களை தொழில்முறை பயிற்சி மற்றும் பிற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பாடநெறிகளாகச் சேர்ப்பதற்கு உபகுழு நியமிக்கப்பட்டது.
இலங்கையில் தொழிற்பயிற்சியை சரியான பாதையில் செலுத்தும் இச்செயற்பாடு ஒரு தேசிய பணி என்பதால் அதற்கு அனைவரின் அர்ப்பணிப்பும் எதிர்பார்க்கப்படுவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
கோப் குழுவின் உறுப்பினர்களான, இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ சமிந்த விஜேசிறி, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ரராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்சன தெனிபிட்டிய, கௌரவ எம்.ராமேஸ்வரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










