தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் நிர்வாக சிக்கல்கள் பல கோப் குழுவில் வெளிப்பட்டன. |
திகதி : | 2023-05-12 |
- பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட முகாமைத்துவ பதவிகள் பல பதில் பதவிகளாக அல்லது வெற்றிடமாக
- நிறுவனத்தின் நிர்வாகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்முறை முழுமையாகப் பலவீனமான நிலையில் - இதன் விளைவாக நிறுவனம் மூடப்படும் அச்சுறுத்தலில் - முழுமையான கணக்காய்வுக்கு நிதி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம்
- நிறுவனத்தை முறையான வணிக மாதிரியொன்றுக்கு மாற்றியமைத்து, அபிவிருத்தி செய்வதற்கு ஒரு சுயாதீனமான மதிப்பீட்டை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை வழங்குமாறு அறிவுறுத்தல்
- பல வருடங்களுக்குள் 51 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை கோரல்
- தற்போது குவிந்து கிடக்கும் 60,000 காப்புறுதி கோரிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்வதாக உறுதியளிப்பு
- அக்ரஹாரா காப்புறுதி வழங்குவது 8 - 9 மாதங்கள் வரை தாமதமடைதல் தொடர்பில் குழு அதிருப்தி
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.05.11 ஆம் திகதி கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (COPE) நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் (NITF) அழைக்கப்பட்டிருந்தது.
• பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட முகாமைத்துவ பதவிகள் பல பதில் பதவிகளாக அல்லது வெற்றிடமாக உள்ளமை
நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி உட்பட, உயர் முகாமைத்துவப்பதவிகள் பல பதில் பதவிகளாக அல்லது வெற்றிடமாக இருப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி நிர்வாக சேவை அதிகாரி என்பதும் தெரியவந்தது. மேலும், முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரியவந்தது. அதற்கமைய, விரைவில் இந்த வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
• நிறுவனத்தின் பலவீனமான நிர்வாகம் காரணமாக நிறுவனம் மூடப்படும் அச்சுறுத்தல்
நிறுவனத்தின் நிர்வாகம் உள்ளிட்ட முழு செயல்முறையும் மிகவும் பலவீனமாக இருப்பதாக குழு சுட்டிக்காட்டியது. வாடிக்கையாளர் சேவை அழைப்புகளுக்கான பதில் வழங்குதல் மிகவும் பலவீனமாக இருப்பதாக குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பில் அவர்கள் கடும் அதிருப்தியையும் வெளியிட்டனர். வணிக மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தலுக்கு தனியான பிரிவு இல்லாமை, ஒருங்கிணைந்த தரவு முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை இதுவரை ஆரம்பிக்காமை, இடர் முகாமைத்துவத்துக்கு அதிகாரி ஒருவர் இல்லாமை போன்றவை முக்கிய பலவீனங்களாக குழுவால் சுட்டிக்காட்டப்பட்டன.
நிறுவனத்தின் இந்த பலவீனமான நிர்வாகத்தினால் நிறுவனம் விரைவில் மூடப்படும் அபாயம் உள்ளதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நிறுவனத்தின் பிரதான வர்த்தகமான அக்ரஹாரா காப்புறுதிக்கு மறுகாப்பீடு இல்லாமை பிரதான சிக்கலாகக் காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.
• நிறுவனத்தை முறையான வணிக மாதிரியொன்றுக்கு மாற்றியமைத்து அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம்
திறைசேரியிலிருந்து இருந்து வரும் பணத்தில் தங்கியிருக்காமல்முறையான வணிக மாதிரியொன்றுக்கு மாற்றியமைத்து அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. வணிக அபிவிருத்தி, நிர்வாக முறைமை, சந்தைப்படுத்தல், மனித வள முகாமைத்துவம் போன்ற முழுத் துறைகளும் பலவீனமாக இருப்பதாகவும், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில் சுய மதிப்பீட்டை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையிடுமாறும் குழு அறிவித்தது.
ஒரு போட்டி வணிக நிறுவனமொன்றாக முன்னோக்கிச் செல்வதற்கு திறைசேரியின் வழிகாட்டுதல்கள் தடையாக இருக்குமானால், இது குறித்து திறைசேரியுடன் கலந்துரையாடி உரிய வழிகாட்டுதல்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
• அரச உத்தியோகத்தர்களின் அக்ரஹாரா காப்புறுதி தொகையை வழங்குவதில் நீண்ட கால தாமதம்
அரச உத்தியோகத்தர்களின் அக்ரஹாரா காப்புறுதிக் கோரிக்கைகளை வழங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது.
கடந்த காலங்களில் அக்ரஹாரா காப்புறுதிக் கோரிக்கைகளை வழங்குவதில் 8-9 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் வினைத்திறனின்மை மற்றும் நிர்வாகப் பலவீனம் என்பன இதற்குக் கரணம் என்றும் தெரியவந்தது. டிசம்பர் 31 ஆம் திகதி வரை 1,08,000 காப்புறுதிக் கோரிக்கைகள் குவிந்திருந்ததாகவும், தற்போது அதனை 60,000 ஆகக் குறைக்க முடிந்ததாகவும் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.
அதற்கமைய, இன்னும் இரண்டு மாதங்களில் அவற்றை நிறைவு செய்வதாக அவர் தெரிவித்தார். இந்த வினைத்திறனற்ற சேவையினால் அக்ரஹாரா காப்புறுதி தொடர்பில் மக்கள் மத்தியில் மிகவும் மோசமான பிம்பம் ஏற்பட்டுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது. அதேபோன்று, தனிப்பட்ட வகையில் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் இந்த நிலைமைக்கு முகங்கொடுக்க நிகழ்ந்ததாக இதன்போது புலப்பட்டது. இந்த நிலையை விரைவாக மாற்றி வினைத்தினரான சேவையொன்றை வழங்கும் நிறுவனமொன்றாக நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
• பல வருடங்களுக்குள் 51 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை கோரல்
1542/11 ஆம் இலக்க 2008.03.25 ஆம் திகதியை வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், மக்கள் கலவரங்கள் மற்றும் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பில் காப்புறுதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து காப்புறுதிகளாலும் பெற்றுக்கொள்ளப்படும் நிதி காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்துக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டரீதியான ஏற்பாடுகள் இருக்கும் நிலையில் அவ்வாறு மேற்கொள்ளப்படாமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதில் அந்தக் காப்புறுதிக் கட்டணங்களில் 12% வாகனக் காப்புறுதியிலும், 80% மோட்டார் வாகனமல்லாத காப்புறுதியிலிருந்தும் காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்துக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமையை 2021 இல் சரி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இதனால் பல வருடங்களாக நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய 51 பில்லியன் ரூபாய் இழக்கப்பட்டுள்ளதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் பொறுப்பாக இருந்த முன்னாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை குழுவுக்கு அழைக்க எதிர்பார்ப்பதாகக் கூறிய குழுவின் தலைவர், இது தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.
• அமைச்சின் பொறுப்புக்கள்
இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை மேம்படுத்தி சரியான பாதையில் கொண்டு செல்ல நிதி அமைச்சைத் தலையிடுமாறும், நிறுவனத்தை மேம்படுத்த நிதி அமைச்சின் செயலாளரின் கீழ் முழுமையான கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதேவேளை, தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை மீண்டும் இரண்டு மாதங்களில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ சமிந்த விஜேசிறி, கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









