இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிர்வாகம் முற்றாக சீர்குலைந்துள்ளது - பணிப்பாளர் நாயகம் உட்பட 7 முக்கிய பதவிகள் வெற்றிடம் - கோப் குழுவில் புலப்பட்டது

திகதி : 2023-05-11

  • பணிப்பாளர் நாயகத்தை கட்டாய விடுமுறையில் அனுப்பியமை உள்ளிட்ட முன்னாள் தலைவரின் சட்டவிரோத நிர்வாக முடிவுகளினால் ஏற்பட்ட நட்டத்துக்கான இழப்பீடு உட்பட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை வழங்குமாறு அமைச்சுக்கு அறிவிப்பு
  • குழுவின் அழைப்பை புறக்கணித்த முன்னாள் தலைவரை மீண்டும் அழைப்பதற்குத் தீர்மானம்
  • அவ்வாறானவர்களை மீண்டும் அரச துறை பதவிகளுக்கு நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் தீர்மானம்
  • நிதிப் பணிப்பாளர் உள்ளிட்ட நிறுவனத்தின் 7 முக்கிய பதவிகள் வெற்றிடமாக உள்ளமை புலப்பட்டது
  • புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தல்
  • அதிகாரசபையின் நோக்கங்களுக்கு புறம்பாக மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் குழுவின் கடுமையாக கவனம் செலுத்தப்பட்டது

2023 மார்ச் 23 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் தொழிற்பயிற்சி அதிகார சபை 2023.05.09 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
 
இதன்போது கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுக்கு அமைய பின்வரும் விடயங்கள் தொடர்பில் குழுவில் பிரதானமாகக் கவனம் செலுத்தப்பட்டது.

பணிப்பாளர் நாயகத்தை கட்டாய விடுமுறையில் அனுப்புதல் உள்ளிட்ட நிர்வாக முடிவுகள் தொடர்பில் முன்னாள் தலைவரின் செயற்பாடுகள் மற்றும் அதிகாரசபையின் நிர்வாகம் முற்றாக சீர்குலைந்துள்ளமை பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் தலைவரினால் தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தை சட்டத்துக்கு முரணான வகையில் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளமை குழுவின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. பணிப்பாளர் சபையின் தீர்மானம் இன்றி இதனை மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் 10 பதவிகளுடன் தொடர்புடைய நபர்களை கடமை இன்றி இடமாற்றம் செய்துள்ளமையும் இதன்போது புலப்பட்டது.

இந்தத் தலைவரின் செயற்பாடு காரணமாக அரசுக்கும் நிறுவனத்துக்கும் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகார சபையின் நிர்வாகம் மிகவும் பாரதூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோப் தலைவர் சுட்டிக்காட்டினார்.    

இந்த நிலையில் அமைச்சின் தலையீடு போதாது எனவும், இவ்விடயத்தில் அமைச்சு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கோப் தலைவர், அது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டார்.

இதன்படி, இவ்விடயம் தொடர்பில் அவசர விசாரணை நடத்தி, இந்த நிதி இழப்பை மீட்பது உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது.

மேலும், இவ்வாறானவர்கள் மீண்டும் அரச சேவை பதவிகளுக்கு நியமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஜனாதிபதியின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் நிர்வாக அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்படும் என கோப் தலைவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்கப்படும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

மேலும், நிறுவனத்தின் நிர்வாகச் சிக்கல்கள், நிதிக் கட்டுப்பாடு, நிறுவன ஒழுக்கம், சொத்து முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம் ஆகிய துறைகள் குறித்து விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்தினால் அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், ஒரு மாதத்திற்குள் அதன் அறிக்கையினை குழுவிடம் சமர்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

நிறுவனத்தின் பெருநிறுவனத் திட்டத்தை தயாரிப்பதன் முன்னேற்றம் தொடர்பில் விசாரணை

அதிகார சபையின் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பெருநிறுவனத் திட்டம் இருக்கவில்லை என்பதால் அதனைத் தயாரிக்குமாறு கடந்த கோப் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி நடத்தப்பட்ட பயிற்சியில் இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக இதன்போது அதிகார சபையின் தற்போதைய தலைவர் குறிப்பிட்டார்.

புதிய பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட வெற்றிடமாகவுள்ள 7 பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ளல்

அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மே மாதத்தில் ஓய்வு பெற இருப்பதால் புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேபோன்று, தற்பொழுது பணிப்பாளர் (நிதி), கணக்காய்வு அதிகாரி, பணிப்பாளர் (நிர்வாகம்) உள்ளிட்ட 7 பிரதான பதவிகளில் வெற்றிடம் காணப்படுவதாகவும், அதனால் நிர்வாகம் முற்றாக சீர்குலைந்துள்ளதாகவும் இதன்போது புலப்பட்டது. அதனால், இந்தப் பதவிகளை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குழு அறிவுறுத்தியது. புதிய ஆட்சேர்ப்புகள் பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்படுவதால், இவ்விடயத்தை உடனடியாக ஆராய்ந்து இரண்டு வாரங்களில் குழுவிற்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கோப் தலைவர் அறிவித்துள்ளார்.

அதிகார சபையின் நோக்கத்திற்குப் புறம்பாக செயற்பட்டுள்ள சந்தர்ப்பங்கள்

அஹங்கம ஹோட்டல் கல்லூரியை சுற்றுலா ஹோட்டலாக 148 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு, பொத்துவில் ஹோட்டல் பாடசாலை வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு 10 அறைகளை நிர்மாணித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதிகாரசபையின் நோக்கங்களுக்குப் புறம்பாக பெருமளவு பணம் செலவழித்து இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இத்திட்டங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.

தொழிற்சந்தைக்கு ஏற்ற வகையில் தொழிற் பயிற்சி வேலைத்திட்டங்களை செயற்படுத்துதல்

தற்போது, கொரியாவில் பயிற்சி பெற்ற 10,000 வெல்டர்களுக்கான (Welding) தேவை உள்ளது என்றும் ஆனால் 300 பேர் மட்டுமே இந்த நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் இதன்போது புலப்பட்டது. எனவே, தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு பயிற்சி வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதற்கு தனியார் துரையின் உதவியைப் பெற்று செயற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களை பெருநிறுவனத் திட்டத்தில் உள்ளடக்கி செயற்படுத்துமாறு கோப் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

சுமார் 50 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலும், தேவையான பயிற்சிப் பொருட்கள் மற்றும்  உபகரணங்கள் கொள்வனவு செய்யாமை, ஆரம்பிக்கப்படாத வேலைத்திட்டங்களுக்கு பாரியளவில் நிதி செலவு செய்துள்ளமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விசாரணைகள் இடம்பெற்றன.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புற, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அழுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ சமிந்த விஜேசிறி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரிதா ஹேரத் ஆகியோர் கலென்பதுகொண்டனர்.

 

1 3

10 15

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom