இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உயர்கல்வியில் பல மறுசீரமைப்புகள் தொடர்பில் கோப் குழு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை

திகதி : 2023-05-03

முறையற்ற வகையில் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை ஒரு மாதத்திற்குள் தயாரித்து பகிரங்கப்படுத்துமாறு அறிவுறுத்தல்

Z புள்ளி முறைமைக்கு மேலதிகமாக நடைமுறைப் பரீட்சை நடத்தி பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துவதற்குப் பரிந்துரை

தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குப் பரிந்துரை

உயர்கல்வி மற்றும் ஏழு ஆண்டு விடுமுறையின் கீழ் வெளிநாட்டு சென்று திரும்பிவராத விரிவுரையாளர்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய 2 பில்லியன் ரூபாய் நிலுவையை பெற்றுக்கொள்ள விரைவில் வேலைத்திட்டம்

பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை நீக்குவதற்குப் பதிலாக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்துவதற்கு குழு வலியுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.04.28 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பான பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அழைத்திருந்தது.

இதன்போது கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்ட பிரதான 10 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

  1. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை பின்பற்றுவது தொடர்பான சிக்கல்கள்
  2. Z புள்ளி முறைமைக்கு மேலதிகமாக ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சை நடத்துவதால் உயர்ந்த Z புள்ளிகளைக் கொண்ட ஒரு சில மாணவர்களுக்கு இடம்பெறும் அநீதி
  3. பல்கலைக்கழ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு வருகையை உறுதிப்படுத்தும் சரியான முறைமையொன்று இல்லாமை
  4. முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாமை காரணமாக சட்டவிரோதமாக கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்தல்
  5. தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பான ஒழுங்குவிதி
  6. தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துதல் மற்றும் தொழிற் சந்தைக்குப் பொருத்தமான வகையில் பாடநெறிகளை தயாரிப்பதன் அவசியம்
  7. பல்கலைக்கழ சேமலாப நிதியம் (UPF) தவறாகப் பயன்படுத்துவதால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியம்
  8. பல்கலைக்கழக கட்டமைப்பின் மனிதவளத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படுதல்
  9.  அதிகமான வெளிநாட்டு மாணவர்களை கவரும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதன் அவசியம்
  10. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தர விடைப்பத்திர மதிப்பீட்டிலிருந்து விலகியுள்ள நிலையில்  அந்தப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு சாதகமான தலையீடு செய்தல்

இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துவது மற்றும் தொழிற் சந்தைக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்குதல் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 2021 இல் பல்கலைக்கழக நுழைவு கிடைக்கும் 26 வீதமானவர்கள் கலைத்துறையில் உயர்தரத்துக்கு தோற்றியவர்கள் என்றும் விஞ்ஞானத் துறையில் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசிப்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைவாகும் எனவும் இதன்போது புலப்பட்டது. எனினும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் பல்கலைக்கழகம் பிரவேசிப்பவர்கள் அதிகம் எனச் சுட்டிக்காட்டிய குழு  இந்தநிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியது.

இந்நாட்டில் உயர்தரத்தைக் கொண்ட பாடசாலைகள் 2952 உள்ளன எனவும், அவற்றில் 1011 பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானத் துறையில் கற்க முடியும் எனவும், 1941 பாடசாலைகளில் விஞ்ஞானத் துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை என்றும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அதாவது உயர்தரத்தைக் கொண்ட பாடசாலைகளில் 65.75%இல் விஞ்ஞானத்துறை இல்லாமை சிக்கலானது என இதன்போது கலந்துரையாடப்பட்டது. STEM கல்வி முறையினூடாக இதற்கு தீர்வு வழங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் விரைவாகத் தலையிட்டு உயர்கல்விக்கு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் அதிக மாணவர்களை அனுப்புவதற்குத் தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.         

நவீன தகவல் தொழிநுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதனால் தாமதமின்றி பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது உள்ளிட்ட ஆணைக்குழுவின் வேலைத்திட்டத்தைப் பாராட்டிய கோப் குழு, மேலும் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களை சர்வதேச அளவுக்கு தரமுயர்த்த வேண்டும் என தெரிவித்தது. விசேடமாக சர்வதேச மாணவர்களை இந்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு அதிகமாக கொண்டுவருவதற்கு தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
 
ஒரு வருடத்துக்கு 90,000 ரூபாய்க்கு திறந்த பல்கலைக்கழகத்தினால் மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இதன்போது புலப்பட்டது. பொதுவாக தனியார் பல்கலைக்கழகமொன்றில் சுமார் 2 – 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த பட்டத்தை 3 இலட்சம் ரூபாவிற்கும் குறைவான செலவில் கற்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாக இது தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவிற்கு குழு உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கினர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை நீக்குவதற்குப் பதிலாக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியது. உயர்கல்வி நிறுவனங்களில் தரத்தை உறுதி செய்வதற்கான  (Quality Assurance) புதிய சட்டத்தின் மூலம் தனி நிறுவனமொன்றை அமைப்பது தொடர்பான யோசனை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதே மிகவும் பொருத்தமானது என குழு சுட்டிக்காட்டியது. இதற்கான அதிகாரங்கள் ஆணைக்குழுவுக்கு ஏன் வழங்க வேண்டும் என்பதை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் தெரிவிக்குமாறு குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், அது தொடர்பாக தலையிடுவதற்கு கோப் குழு தயாராக இருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

உயர்கல்விக்காக வெளிநாடு சென்று திரும்பிவராத விரிவுரையாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் ரூபாய் அறவிட வேண்டும் என்பது இதன்போது தெரியவந்தது. இத்தொகையை உரிய உத்தரவாதம் வழங்கியவர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறு வெளிநாடு சென்ற 617 ஆசிரியர்களில் 84 பேரே இதுவரை உரிய கொடுப்பனவுகளை செய்துள்ளதாக தெரியவந்தது. அதன்படி, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிவிக்குமாறு குழு பரிந்துரைத்தது.

பல்கலைக்கழக பிரவேசத்தின் போது ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் கவனம் செலுத்திய குழு, இதன் மூலம் அதிக Z புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியது. அந்தப் பாடங்களுக்கு உயர்தரப் பரீட்சையின் போதும் நடைமுறைப் பரீட்சை நடத்தப்பட்டு Z புள்ளிகள் வழங்கப்படுவதால் மேலும் நடைமுறைப் பரீட்சை அவசியமில்லை என வலியுறுத்தப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் உடனடியாக முடிவெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரைத்தது.

கணக்காய்வாளர் நாயகம் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டியபடி, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கொடுப்பனவை உறுதிப்படுத்துவதற்கு வருகையை உறுதிப்படுத்தும் முறைமையொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு கோப் குழு மானியங்கள் அணைக்குழுவுக்குப்பரிந்துரைத்தது.

ஒரு சிலர் பல்வேறு நிறுவனங்களால் சட்டரீதியற்ற வகையில் வழங்கப்படும் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களை பயன்படுத்துவது குறித்து குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதனால் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்கள் இழிவுபடுத்தப்படுவதால் இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழு தலையிட வேண்டும் என குழு வலியுறுத்தியது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு மாதங்களில் மீண்டும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அழுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom