இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத தாய்மார்களினால் கைவிடப்பட்ட 03 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், தற்போதுள்ள சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் வகையில் சட்டத் தீர்மானங்களை எடுப்பது தொடர்பான விசேட கூட்டம் பாராளுமன்றத்தில்

திகதி : 2023-04-28

ஏதாவதொரு காரணத்தினால் தமக்கு தேவையற்ற அல்லது பராமரிக்க முடியாக 03 மாதங்களுக்கு குறைந்த குழந்தைகளை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் விட்டுச் செல்வதற்கு அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் மாகாண நன்னடத்தைத் திணைக்களங்களின் கீழ் மேற்பார்வை செய்யப்படும் 379 குழந்தை பராமரிப்பு நிலையங்களில் கூடங்களைத் திறப்பது மற்றும் அது தொடர்பான தற்போதைய சட்டரீதியான நிலைமைகள் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டம் அண்மையில் (ஏப். 26) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த விசேட கூட்டம் இடம்பெற்றது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அல்லது அதன் மூலம் மேற்பார்வை செய்யப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒப்படைத்தல் அல்லது வைத்தியசாலைகள், வீதியோரங்கள் போன்ற ஏனைய இடங்களில் விட்டுச்செல்லல் சாதரணமாக இடம்பெறுவதுடன், மிகவும் சிறிய தொகையான குழந்தைகள் தமது பெற்றோரால் கொல்லப்படுவது போன்ற சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளதாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ  குறிப்பிடுகையில், இந்த செயற்பாடு தொடர்பான அனைத்து அதிகாரிகளையும் கொண்ட குழுவொன்றை நியமித்து இந்த வேலைத்திட்டத்துக்கு தேவையான சட்டக் கட்டமைப்பு உள்ளிட்ட வழிகாட்டல் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

குழந்தைகளின் தாய் யார் என்பது தொடர்பில் அறிந்துகொள்ள குழந்தை ஒன்றுக்கு தேவை ஏற்படும் போது அது குழந்தையின் உரிமை என்பதால், இவ்வாறு கைவிடப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள் தொடர்பான தகவல்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் வகையில் அல்லது ஏதாவதொரு வகையில் பதிவுசெய்யப்படும் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வது முக்கியமானது என இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், இலங்கை பொலிஸ், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 3

4 5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom