எக்ஸ்பிரஸ் பேர்ல் போன்ற அனர்த்தங்களின் போது செயற்படவேண்டிய தெளிவான பொறிமுறையொன்றை விரைவாகத் தயாரிக்கவும் - சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவுறுத்தல் |
திகதி : | 2023-04-26 |
- தேவையான சட்ட ஏற்பாடுகள் கிடைக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதன் முன்னேற்றத்தை ஒரு மாதத்துக்குள் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் அறிவுறுத்தல்
- சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சிங்கப்பூரில் வழக்குத் தொடர்வதற்கு இணங்கவில்லை என தெரிவிப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து போன்ற அனர்த்தங்களின் போது செயற்படவேண்டிய முறையை குறிப்பிடும் தெளிவான பொறிமுறையொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும நேற்று (ஏப். 25) கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இவ்வாறான அனர்த்தமொன்றின் போது அதற்கு முகங்கொடுக்கும் பொறுப்புவாய்ந்த நிறுவனமான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை என்பதால், விரைவாக செயற்படுவது மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பான சட்ட அதிகாரத்தைப் பெறும் வகையில் கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தை விரைவாகத் திருத்துமாறும், அதன் முன்னேற்றத்தை ஒரு மாதத்துக்குள் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
அதேபோன்று, இவ்வாறான அனர்த்தங்களின் போது இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் வரை தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்குப் பிரத்தியேக நிதியமொன்றை ஆரம்பிப்பதன் தேவை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு வரும் கப்பல்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் சிறிய வரி மூலம் இந்த நிதியத்தை அமைக்க முடியும் என இதன்போது குழு சுட்டிக்காட்டியது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துத் தொடர்பான சூழலியல் மற்றும் ஏனைய பாதிப்புக்கள் மற்றும் உரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பற்றிய விசாரணை தொடர்பில் ஆராய இடம்பெற்ற இந்தத் குழுக் கூட்டத்திற்கு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கடல்சார் சட்டம் தொடர்பான வல்லுனர்கள், நிபுணர்கள், சூழலியல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்தக் குழு இறுதியாகக் கூடிய போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த விபத்து சம்பந்தமான வழக்கை சிங்கப்பூரில் தொடர்வது பற்றி எந்த இணக்கத்துக்கும் வரவில்லை என கடல்சார் சட்டம் தொடர்பான நிபுணர்களில் ஒருவரான கலாநிதி டேன் மாலிக குணசேகர தெரிவித்தார். இலங்கையில் வழக்குத் தொடர்வது சாதகமானது என அதன்போது பெரும்பலான சட்ட வல்லுனர்கள் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார். அதேபோன்று, இதற்கு முன்னர் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையிலும் இந்நாட்டில் வழக்குத் தொடர்வது பொருத்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்
அதற்கமைய, இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்து அறிவுறுத்துவது மிகவும் பொருத்தமானது என இந்தபோது கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று, இவ்வாறான அனர்த்தங்களின் போது நாட்டுக்குப் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சிக்கல் காணப்படுவதாக இதன்போது நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு முன்னர் இடம்பெற்ற நியூ டயமண்ட் கப்பல் விபத்து சம்பந்தமான வழக்குத் தாக்கல் செய்தல் தாமதமடைந்ததாகவும், வழக்குத் தொடர்வதற்கான கால எல்லை நிறைவடைவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் பேராசிரியர் ருச்சிரா குமாரதுங்க தெரிவித்தார். அதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவர் வெளிநாடு சென்றிருந்ததாகவும் உரிய ஆவணங்களைப் பெறுவதற்கும் சிரமப்பட்டதாகவும், மீண்டும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினூடாக ஆவணங்களைப் பெற்று வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நாட்டின் கடல்சார் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் முறையான வகையில் இடம்பெறவேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி திட்டவட்டமான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல், தேவையான அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழு வலியுறுத்தியது.
குழு உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அகில எல்லாவல மற்றும் மற்றும் கௌரவ திலக் ராஜபக்ஷ ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










