பத்தரமுல்லை நகரத்தில் 40 வருடங்களாக இல்லாமல் இருக்கும் பஸ் நிலையத்தை அமைப்பதற்கு காணி - போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் |
திகதி : | 2023-04-25 |
• பயண நேரம் வரும்வரை பஸ் தரிப்பிட வசதிகள் இல்லாத பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கொழும்பு கோட்டை பகுதியிலிருந்து காணி வழங்கவும் தீர்மானம்
• சுற்றுலா துறைக்காக புகையிரத நிலையங்களுக்கருகில் துவிச்சக்கர வண்டி வேலைத்திட்டம்
பத்தரமுல்லை நகரில் பஸ் நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பத்தரமுல்லை - கடுவலை வீதிக்கு அருகாமையில் இனங்காணப்பட்டுள்ள காணியை விரைவாக விடுவிக்குமாறு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இன்று (ஏப். 25) ஆலோசனை வழங்கினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இந்தக் காணியை தற்பொழுது பாதுகாப்புத் துறையினர் தற்காலிகமாக பயன்படுத்தி வருவதால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் அறிவித்து காணியை விரைவாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், ஒரு மாத காலத்துக்குள் இது தொடர்பில் குழுவுக்கு அறிவிக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
பத்தரமுல்லை பிரதேசம் நிருவாக நகரமாக மாறி 40 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னும் பஸ் நிலையமொன்று இல்லாத நிலையில் பாரிய பிரச்சினை நிலவி வருவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, உடனடியாக செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து குழுவில் வலியுறுத்தப்பட்டது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இன்று (25) பாராளுமன்றத்தில் கூடியதுடன், போக்குவரத்து அமைச்சு, புகையிரத திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கொழும்பு மாநகர சபை, மேல் மாகாண வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தன.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள புகையிரத திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார அதிகாரசபைக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியை கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில் பஸ்களை அடுத்த பயண நேரம் வரும்வரை நிறுத்துவதற்கு தற்காலிகமாக விடுவிப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது. புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணி சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டது என இதன்போது தெரியவந்தது. அத்துடன் பழைய மனிங் சந்தை அமைந்திருந்த நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி ஐந்து ஏக்கர் எனவும் அதில் இரண்டு ஏக்கரை தற்காலிகமாக விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கம் தெரிவித்தனர். அதற்கமைய, இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுத்து அதன் முன்னேற்றத்தை ஒரு வார காலத்துக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.
இலத்திரனியல் டிக்கட் சேவையை ஆரம்பித்தல், பஸ் வண்டிகளுக்கு GSP தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தல், தனியார் போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை பயன்படுத்துவதால் தினசரி சுமார் ஒரு பில்லியன் அளவில் பணம் புழங்குவதாகவும், மத்திய வங்கியின் உதவியுடன் நவீன இலத்திரனியல் டிக்கட் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டிகளை வாடகைக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இதனை முன்னோடித்திட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ சுமித் உடுக்கும்புற, கௌரவ உதயகாந்த குணதிலக மற்றும் கௌரவ குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










