இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இதுவரை பரீட்சைகள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை, இம்முறை சட்டக் கல்லூரியினால் தயாரிக்கப்படுவது குறித்து அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் ஆராய்வு

திகதி : 2023-04-18

பரீட்சைகள் திணைக்களத்தினால் இதுவரை தயாரிக்கப்பட்ட சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை, இம்முறை ஏன் சட்டக் கல்லூரியினால் தயாரிக்கப்படுகின்றது என்பது குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் சட்டக் கல்விப் பேரவையிடம் எழுத்துமூலம் வினவுவதாக அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் 2023.01.30 அன்று 2317/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2023.02.21 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழான கட்டளை மற்றும் 6 ஆண்டறிக்கைகள் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

மேலும், (276 ஆம் அத்தியாயமான) கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ் 2020.12.30 அன்று 2208/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவையினால் ஆக்கப்பட்ட விதிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சைகள் ஆங்கில மொழியில் நடாத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய மேற்படி வர்த்தமானி பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அதே வர்த்தமானியில் சேர்க்கப்பட்ட ஏனைய பிரேரணைகளும் தோற்கடிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

சட்டக் கல்லூரியின் கவனக்குறைவான தீர்மானத்தின் விளைவாக ஏப்ரல் மாத இறுதியில் பரீட்சைக்குத் தோற்ற எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு இது பெரும் அநீதி என குழு மேலும் சுட்டிக்காட்டியது.

மேலும், ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சை நடத்த வேண்டும் என்ற குறித்த விதியின் காரணமாக விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு பரீட்சைக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்குவது குறித்து ஆராயுமாறும், அதற்காக அவர்கள் தயார் செய்வதற்கு கணிசமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகையில், கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்திற்கமைய கொள்கை ரீதியான வழிகாட்டலை வழங்க அமைச்சருக்கு அதிகாரம் இருந்தபோதிலும், கல்வி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் சுயாதீனமாக இயங்கும் சட்டக் கல்விப் பேரவையினாலே மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார். எனினும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய, சம்பந்தப்பட்ட விதிகளின் பிரகாரம் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் எதிர்கால பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க இடமளிக்குமாறு சட்டக் கல்விப் பேர்வையியிடம் தான் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ சிசிர ஜயகொடி, கௌரவ அஷோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ பிரேமலால் ஜயசேகர,  கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ கெவிந்து குமாரதுங்க, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் கௌரவ (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

5 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom