இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அனைத்து அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை விரைவாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவும் - பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

திகதி : 2023-04-03

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை தாமதிக்காமல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது அந்நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பு என்பதால், அந்த அறிக்கைகளை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2023.03.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஒரு சில நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை அனுமதிக்காக ஆலோசனைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் ஒரு சில அறிக்கைகள் 2018, 2019 ஆகிய ஆண்டுகளுக்குரியது என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஆண்டறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர். இவ்வாறு பழைய அறிக்கைகளை சமர்ப்பிப்பது அவசியம் என்றாலும், சம்பந்தப்பட்ட ஆண்டுக்குரிய அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிப்பது மிகவும் பயனுள்ளது என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய உரிய ஆண்டறிக்கைகளை தாமதமின்றி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதேபோன்று, ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்கள் வேலைத்திட்டம் தொடர்பான நியமனங்கள் வழங்குவது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே நியமனம் வழங்கவேண்டும் எனவும், அதற்கான பரிந்துரைகளை வேறு தரப்பினர் வழங்கக்கூடாது எனவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கமைய, உரிய பிரதேசங்களிலேயே அந்த நியமனங்களை வழங்க மேற்கொண்ட தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், ஒரு சில மாவட்டங்களில் பிரதேச செயலகப் பிரிவுகளில் அலுவலகங்களை அதிகரிக்கும் தேவை, கிராம சேவகர் பிரிவொன்றை நிர்ணயிக்கும் போது கருத்திற்கொள்ளும் விடயங்கள், அரச சேவையில் ஆங்கில மொழிக் கல்வி மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவை தேர்ச்சி பெறச்செய்வது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அதேபோன்று, ஒரு சில மாவட்டங்களில் காணப்படும் நகர சபைகள் சிலவற்றை மாநகர சபைகளாக மாற்றுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புற, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக்க பிரியந்த, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ பிரசன்ன ரன்வீர, கௌரவ சாந்த பண்டார, கௌரவ டி.பீ. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜே.சீ. அலவத்துவல, கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ சிந்தக அமல் மாயாதுன்ன, கௌரவ சுமித் உடுக்கும்புற, கௌரவ திஸகுட்டி ஆரச்சி, கௌரவ குமாரசிறி ரத்நாயக்க, கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ ஜகத் சமரவிக்ரம, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ சம்பத் அத்துகோரல, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி ஆகியோரும் இக்குழுவில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom