காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்க அமைச்சரவை மட்டத்திலான குழுவொன்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் நியமனம் |
திகதி : | 2023-03-28 |
அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை மட்டத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் கௌரவ ஹரின் பெர்னாந்து தலைமையில் மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் பல வருடங்களாக வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அமைச்சர் இந்தக் குழுவை நியமித்தார்.
இதுவரை வழங்காதுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்கி முடிப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும், பூர்த்திசெய்யப்பட்டுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவது குறித்து முடிவெடுக்க இவ்வாரம் இக்குழு கூடவிருப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
வடபகுதியில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு வடபகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அதேநேரம், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டிலுள்ள புதிய சுற்றுலாத் தளங்கள், கட்டணங்கள், போக்குவரத்து வசதிகள், ஹோட்டல் வசதிகள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை வழங்கக் கூடிய கையடக்கத்தொலைபேசி செயலியொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
சுற்றுலா வலயங்களில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் வர்த்தக செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 16 சுற்றுலா வலயங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவிருப்பதாகவும், இதன் ஊடாக குறிப்பிட்ட விடயம் குறித்தும் கவனம் செலுத்த முடியும் என்றார்.
இக்கூட்டத்தில் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் கீழ் உள்ள அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









