எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துத் தொடர்பான 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கான வழக்கு சிங்கப்பூரிலா? இலங்கையிலா? தாக்கல் செய்யப்பட வேண்டும் - சம்பந்தப்பட்ட தரப்பினரை மீண்டும் அழைத்து ஆய்வு செய்ய சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தீர்மானம் |
திகதி : | 2023-03-23 |
58 நாட்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்...
இலங்கையின் கடற்பரப்பில் 2021.05.19 ஆம் திகதி இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு மற்றும் இது தொடர்பான நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் 2023.03.23ஆம் திகதி நடைபெற்ற சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, சட்டமா அதிபர் திணைக்களம், சுற்றாடல் பாதிப்பு மதிப்பீட்டு சபை, விஞ்ஞானிகள், கடல் மற்றும் சுற்றாடல் சூழல் சார் சட்டநிபுணர்கள், மீனவ சமூகத்தினர் மற்றும் சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான மதிப்பிடப்பட்ட 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சிவில் வழக்கை இலங்கைக்கு மாற்றுவதா அல்லது சிங்கப்பூருக்கு மாற்றுவதா என்பது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது.
இந்த விபத்துக் காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு துறைக்கும் ஏற்பட்ட நஷ்டத்தின் பெறுமதி 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் என பேராசிரியர் பிரஷாந்தி குணவர்த்தன மற்றும் பேராசிரியர் அஜித் த.சில்வா ஆகியோரின் இணைத் தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழுவினால் மதிப்பிடப்பட்டுள்ளமையும் இங்கு புலப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரனி அசேல ரக்காவ குறிப்பிடுகையில், இந்தக் கப்பல் விபத்துத் தொடர்பான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சிவில் வழக்கைத் தாக்கல் செய்வது குறித்து முடிவெடுப்பதற்கு கடல்சார் சட்டம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து நிபுனத்துவம் பெற்ற சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், இந்த கப்பல் விபத்து தொடர்பான வழக்கு விசாரணையை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே குழுவின் முடிவு என்றும் தெரிவித்தார். எவ்வாறாயினும், சிங்கப்பூரில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அதன்படி, சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன், சட்டத்தின் பிரகாரம் இன்னும் 58 நாட்களுக்குள் வழக்குத் தொடரப்பட வேண்டும் எனவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிங்கப்பூரில் வழக்குத் தொடருவதன் மூலம் இலங்கைக்கு ஏதேனும் பாதகங்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
ஏற்கனவே கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடற்கரையை சுத்தப்படுத்துதல் மற்றும் சேத மதிப்பீடு போன்ற நடவடிக்கைகளுக்காக கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட பணம் இடைநிறுத்தப்பட்டமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை எக்காரணம் கொண்டும் இந்தக் கப்பலின் உள்ளேயோ அல்லது அதன் அருகிலோ செல்ல அனுமதிக்காமை குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.
அதனடிப்படையில், எதிர்காலத்தில் இந்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் சம்பந்தப்பட்ட தரப்பினரை மீண்டும் அழைத்து சட்ட ரீதியான விடயங்கள் குறித்து ஆராய்ந்து, விஞ்ஞானிகள் குழுவின் ஆராய்ச்சிக்கான நிதி வசதிகளைப் பெறுவது மற்றும் அவற்றுக்குக் காணப்படும் சட்டத் தடைகளை நீக்குவது போன்ற விடயங்களை மேலும் ஆராய்வு செய்யவும் இங்கு முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ துஷார இந்துனில் அமரசேன, கௌரவ வருண லியனகே, கௌரவ அகில எல்லாவல, கௌரவ நாளக பண்டார கோட்டேகொட, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோரும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ திலிப் வேதஆராச்சி மற்றும் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








