இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பரிந்துரைகளுக்கு மட்டுப்படுத்தாமல், தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக தலையிடுகிறோம் - தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கலாநிதி சரத் வீரசேகர

திகதி : 2023-03-23

இதுவரை வழங்கப்பட்ட பரிந்துரைகளுடன் மட்டுப்படுத்தாமல் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாகத் தலையிடப்போவதாகத் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர கடந்த மார்ச் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த மேற்பார்வைக் குழுவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த 21ஆம் திகதி கூடியபோதே அதன் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் குழுவானது துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் மிகவும் முக்கியமான பணியாற்றும் குழு எனச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர், இதில் அடங்கும் பல்வேறு துறைகள் குறித்து எதிர்வரும் காலத்தில் கவனம் செலுத்த எதிர்பார்த்திருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

கேந்திர முக்கியத்துவம் நிறைந்ததாக அமைந்துள்ள இலங்கைக்கு கடந்த காலத்திலிருந்து பல்வேறு ஆக்கிரமிப்புக்கள் மற்றும் எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டதாகவும், இது புதிய தோற்றத்தில் பௌதீக ஆக்கிரமிப்புக்களுக்குப் பதிலாக வெளிநாட்டு உடன்படிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படலாம் என்றும் வீரசேகர தெரிவித்தார். இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பதைக் கண்டறிவது இந்தக் குழுவின் பொறுப்பு என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த நாட்டில் மத தீவிரவாதம் செயற்படும் அபாயம் காணப்படுவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மதம் மற்றும் மொழியை மட்டும் போதிக்கும் பதிவு செய்யப்படாத மத்ரஸா பாடசாலைகள் குறித்தும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து தீவிரவாத கருத்துக்கள் மற்றும் விரிவுரைகளை வழங்குபவர்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தீவிரவாதத்தை தோற்கடிப்பது தொடர்பாக மிக முக்கியமான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 2015-2019 ஆம் ஆண்டில் செயற்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான  துறைசார் மேற்பார்வைக்குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும், எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கலவரங்களை தடுத்து நிறுத்தி நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பாதுகாப்பு மட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டிருந்தால், அவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது என்றும் குழு வலியுறுத்தியது.

பயங்கரவாதிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்தபோது இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டது.

இது தவிர போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம், இணையக் குற்றங்கள், சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், குற்றங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினர் குழுவின் முன் அழைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பேராசிரியர் சன்ன ஜயசுமண, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ மேஜர் சுர்ஷனா தெனிபிட்டிய, கௌரவ சுமித் உடுகும்புர, கௌரவ சம்பத் அத்துகோரள மற்றும் கௌரவ நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom