இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்களுக்கு பெப்ரவரி மாத சம்பளத்தை வழங்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம்

திகதி : 2023-03-02

இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கான 2023 பெப்ரவரி மாத சம்பளத்தை இதற்கு முன்னரான மாதங்களில் வழங்கிய நடைமுறைக்கு அமைய தாமதம் இன்றி வழங்குவதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கப்பாட்டை வழங்கியது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபை கடந்த காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்டமையால் பணியாளர்களை உள்ளீர்ப்பதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படாமையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக இவர்களுக்குக் காணப்படும் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இயங்க முடியாத நிலையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 400 பஸ்வண்டிகள் உள்ளடங்கலாக 1800ற்கும் அதிகமான பஸ்வண்டிகளை இவ்வருடம் சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குத் தேவையான சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும்  அமைச்சர் குழுவில் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் 500 சிறிய பஸ்வண்டிகள் வழங்கப்படும் என்றும், மேலும் 100 பெரிய பஸ் வண்டிகள் அடுத்த வருடத்தில்  வழங்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போதிய நிதி ஒதுக்கீடுகள் இன்மையால் பல்வேறு வீதி அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வெளிநாடுகளின் கடன் திட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடன்கள் யாவும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுமாயின் இடைநிறுத்தப்பட்டுள்ள ஏனைய கடன் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.

அத்துடன், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2022 ஒக்டோபர் 10ஆம் திகதிய 2301/17ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் 2022 நவம்பர் 14ஆம் திகதிய 2306/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பனவற்றுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ சிறிபால கம்லத், கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன், கௌரவ.டி.பி.ஹேரத், கௌரவ காதர் மஸ்தான், கௌரவ அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ உதயகாந்த குணதிலக, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ உபுல் மஹேந்தி ராஜபக்ஷ, கௌரவ பிரியங்கர ஜயரத்ன, கௌரவ அஷோக அபேசிங்ஹ, கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப், கௌரவ மிலான் ஜயதிலக, கௌரவ குமாரசிறி ரத்னாயக, கௌரவ முதிதா.த சொய்சா, கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ ரஜிகா விக்ரமசிங்ஹ, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ குலசிங்கம் திலீபன், கௌரவ சுமித் உடுகும்புர மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom