இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு நூற்றாண்டை நிறைவுசெய்கிறது

திகதி : 2023-10-16

  • நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA) தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை

 

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA) உருவாக்கப்பட்டு நாளையுடன் (ஒக். 17) நூறு ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இதனை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நாளையதினம் (17) சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

இலங்கைப் பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது நிதி கண்காணிப்புக் குழுவாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கருதப்படுகிறது. வெஸ்மின்ஸ்டர் பாராளுமன்ற முறையைப் பின்பற்றி இந்தக் குழு உருவாக்கப்பட்டது. கௌரவ ஐ.ஆர்.தம்பிமுத்து அவர்களினால் சட்டவாக்கப் பேரவையில் 1921ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்த பிரேரணைக்கு அமைய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அமைக்கப்பட்டது. 1923ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி அமைக்கப்பட்டு அதன் முதலாவது கூட்டம் 1923ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. இருந்தபோதும் 1948ஆம் ஆண்டே 125வது நிலையியற் கட்டளைக்கு அமைய முழு அதிகாரம் கொண்ட அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அமையப்பெற்றது. ஆரம்பம் முதல் இதுவரை 33 தலைவர்களால் வழிநடத்தப்பட்டுள்ள அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தற்போதைய தலைவராக இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண செயற்பட்டு வருகிறார். தற்பொழுது இதன் உறுப்பினர்களாக 31 பேர் காணப்படுகின்றனர்.

அரசாங்க நிதி தொடர்பில் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் பிரதான பணியாகும். அரசாங்க நிறுவனங்களை கணக்காய்வு செய்து கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கைகளே குழுவின் விசாரணைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. இருந்தபோதும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளில் இல்லாத அரசாங்க நிதி தொடர்பான விடயங்களை ஆராய குழுவுக்கு எவ்விதமான தடையும் இல்லை. 2023ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின்படி ஏறத்தாழ 835 அரசாங்க நிறுவனங்கள் இந்தக் குழுவின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.

இருந்தபோதும், அரசாங்க நிறுவனங்கள் குழு முன்னிலையில் அழைக்கப்படுவதற்கு மேலதிகமாக 835 நிறுவனங்களையும் குழுவிற்கு முன்னிலையில் அழைப்பது சிரமமான விடயம் என்பதால், ஒன்லைன் முறையில் வழங்கப்படும் கேள்விப்பத்திரங்கள் மூலம் நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை எட்டப்பட்ட அனைத்து நோக்கங்களின் பலன்களையும் மக்கள் பெற்றுள்ளனர். இக்குழுவின் தற்போதைய தலைவரான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் கெளரவ லசந்த அழகியவண்ணவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், உயர் செயல்திறனைப் பதிவுசெய்த நிறுவனங்களுக்கு விருதுகளும் சான்றிதழுகளும் வழங்கப்பட்டு அவை ஊக்கப்படுத்தப்பட்டுள்ளன.

எட்டாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் ஆகியோர் கௌரவ சபாநாயகரிடம் விடுத்த கூட்டு வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் குழுக்களின் கூட்டங்கள் ஊடங்களுக்குத் திறக்கப்பட்டன. அதன்படி குழுவின் அமர்வுகள் PEO TV சனல் 91  அலைவரிசையில் ஒளிபரப்பப்படுகின்றன.

 

பின்னணிக் குறிப்பு

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom