இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைப் பாராளுமன்றத்தில் இயலாமையுடன் கூடியவர்களின் உரிமைகளை மேலும் உறுதிப்படுத்துவது தொடர்பில் நிகழ்ச்சித்திட்டம்

திகதி : 2023-09-06

இலங்கைப் பாராளுமன்றத்தில் இயலாமையுடன் கூடியவர்களின் உரிமைகளை மேலும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு சில தெரிவு செய்யப்பட்ட பணியாட்தொகுதி அங்கத்தவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 2023 ஆகஸ்ட் 18 முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது.  

இதில் இயலாமையுடன் கூடியவர்களை உள்வாங்குவதற்கான பாராளுமன்ற செயலணி, பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு மற்றும் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவு, பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இயலாமையுடன் கூடியவர்களை உள்வாங்குவது தொடர்பில் பாராளுமன்றத்தை வலுப்படுத்தும் நீண்ட கால வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட முடியும்.

முழுப் பாராளுமன்ற வழக்கத்தையும், டிஜிட்டல் மற்றும் சமூக வெளிகளை இயலாமையுடன் கூடியவர்களுக்கு நட்புறவானதாக மாற்றுவதற்கு தற்பொழுது இலங்கை பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இயலாமையுடன் கூடியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு பிரவேசிப்பதற்கான இயலுமை தொடர்பான விரிவான பகுப்பாய்வு இந்த வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கைக்கு அமைய, பௌதிகக் கட்டடங்கள், பாராளுமன்ற இணையத்தளம் மற்றும் டிஜிட்டல் பொதுவெளி என்பன இயலாமையுடன் கூடியவர்களுக்கு நட்புறவானதாக மாற்றுதல் மற்றும் பணியாட்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இயலுமை அபிவிருத்தி உள்ளிட்ட விருத்தி செய்யப்பட வேண்டிய பல துறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இது தொடர்பில் தொடர்ச்சியாகவும் நிலைபேறான முறையுடனும் பணியாற்றுவதற்காக இயலாமையுடன் கூடியோரை உள்ளடக்குவது மீதான விசேட செயலணியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் நியமித்தார். செயலணியானது அனைத்து திணைக்களங்களினதும் தலைவர்களை உள்ளடக்கியிருப்பதுடன் பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகத்தினால் தலைமை தாங்கப்படுகிறது. மேலும் மதிப்பீட்டு அறிக்கையின் சிபார்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றச் செயலகம் என்பவற்றின் சூழமைவில் இயலாமையுடன் கூடியவர்களை உள்ளடக்கிக்கொள்ளும் பல்வேறு அம்சங்கள் மீது கவனம் குவிக்கும் மொடியுல்களுடன் ஒரு பயிற்சிக் கையேடு விருத்தி செய்யப்பட்டது. கையேடானது உள்ளுர் கருத்துப் பரிமாற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் என்பதுடன் எதிர்காலத்தில் இயலுமையை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.

சூழல், மனப்பாங்கு மற்றும் நிறுவன ரீதியாகக் காணப்படும் தடைகளுக்கு முகங்கொடுக்கும் இயலாமையுடன் கூடியவர்கள், அங்கவீனம் மாத்திரமல்லாமல் சமூகத்தில் பொதுவான பிரஜையாக இருப்பதற்கும் தடைகள் காணப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த அமர்வுகளின்பொழுது பங்குபற்றுனர்கள் ஒரு அடிப்படை உணர்வூட்டல் ஊடாக கொண்டு செல்லப்பட்டதுடன், அதிலே மனித உரிமைகள் பார்வைநோக்கிலிருந்து இயலாமையுடன் கூடியோரைப் புரிந்துகொள்ளுதல் மற்றும்  கருத்துருவாக்கத்தின் முக்கியத்துவம்  என்பனவற்றுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டன. இம் மாதிரியானது இயலாமையுடன் கூடிய ஆட்களுக்கான எல்லா மனித உரிமைகளையும் முழுமையாகவும் சமனாகவும் அனுபவிப்பதை உறுதிப்படுத்துகிறது, அவர்களது பிறப்புரிமையாக வந்த மகத்துவத்தை மதித்தல், சம சந்தர்ப்பங்கள் மீது கவனம் குவித்தல் என்பவற்றுடன் சமூகத்தில் பாரபட்சமின்மை மற்றும் பங்குபற்றுகையை அமுல்படுத்துவதை இது ஊக்கவிக்கிறது. இயலாமையுடன் கூடிய ஆட்களை  சமூக அனுதாபம் தேவையான ஆட்களாக அல்லாமல் சம உரிமை கொண்டவர்களாக சமூகம் பார்ப்பதை இது உறுதி செய்கிறது.

ஆகவே இவ்வாறான தடைகளை அகற்றினால் இயலாமையுடன் கூடிய பின்னணி ஏற்படுவதில்லை என்பதுடன், சமூகம் மற்றும் நிறுவன ரீதியாக, இயலாமையுடன் கூடியவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தடைகள் இன்றி சாதாரண நபர் ஒருக்கு போன்று சமூகத்தில் பங்கெடுக்கக் கூடிய வகையில் தடைகளை நீக்குவதற்கு நம் முயற்சிக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்கள் இயலாமையுடன் கூடியவர்களின்  யதார்த்தங்களை நன்கு புரிந்துகொள்ளவும் உதவும் வகையில் பிரயோக ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஒரு தொகுதி உள்நாட்டுப்  பயிற்சியாளர்கள் அவதானிப்பாளர்களாக நிகழ்ச்சிகளில் இணைந்து கொண்டதுடன், இந்த துறை தொடர்பான பல வருடங்கள் அனுபவம் கொண்ட சர்வதேச பயிற்சியாளர் ஒருவரால் இந்த நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் இந்த முயற்சிக்கு தேசிய ஜனநாயக நிறுவகத்தினால் ஆதரவளிக்கப்பட்டதுடன் USAID இனால் நிதி அனுசரணை வழங்கப்பட்டது.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom