ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளால் மீண்டும் தெரிவு |
திகதி : | 2022-05-05 |
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளால் இன்று (05) மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை முன்மொழிந்தனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால.டி.சில்வா இதனை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த இதனை வழிமொழிந்தார். இதற்கு ஆளும் கட்சியின் ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அதேநேரம், எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாகீர் மாகார் அவர்களின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஞ்சித் மத்துமபண்டார முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல இதனை வழிமொழிந்தார்.
இதற்கமைய பிரதி சபாநாயகரைத் தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு ஆதரவாக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதில் செல்லுபடியாகாத 3 வாக்குகளும் பதிவாகியிருந்ததுடன், 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதற்கமைய 83 மேலதிக வாக்குகளால் புதிய பிரதி சபாநாயகராக கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய இவ்வாறு புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. நிலையியற் கட்டளை 06(1) இற்கு அமைய பிரதி சபாநாயகர் பதவி அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவி வெற்றிடம் ஏற்பட்டால் அதனையடுத்து நிகழும் முதலாவது கூட்டத்தின் பொது அலுவல்கள் ஆரம்பத்தின்போது, சந்தர்ப்பதத்திற்கு அமைய பிரதி சபாநாயகர் ஒருவரை அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளர் ஒருவரை
தேர்வு செய்வதற்குப் பாராளுமன்றம் முற்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஞ்சித் சியம்பாலபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார். இது தொடர்பில் ஜனாதிபதியின் பதில் தனக்குக் கிடைத்திருப்பதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (04) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து புதிய பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்தது. இதன்போது பிரதி சபாநாயகராக கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவானார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






