இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த நிதி அமைச்சரின் அறிவிப்புத் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்

திகதி : 2022-05-04

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்களின் கீழ் நிதி அமைச்சரினால் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட கூற்றுத் தொடர்பான விவாதம் பி.ப 5.30 மணி வரை நடைபெற்றது.

பாராளுமன்றம் இன்று மு.ப 10.00 மணிக்குக் கூடியதுடன், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் “கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய, சட்டமூலத்தின் அட்டவணை I உடன் சேர்த்து வாசிக்கப்படும் 2 (1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 43(1) ஆம் உறுப்புரையுடன் முறணானது என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன்  இவ் வாசகம் அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் தேவைப்பாடான விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே நிறைவேற்றப்படலாம் என்பது உள்ளிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் இந்த அறிவிப்பில் உள்ளடங்கியிருந்தன.

அத்துடன், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் கௌரவ ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் பெயரை தெரிவுக் குழு நியமித்திருப்பதாக சபாநாயகர் சபையில் விடுத்த அறிவிப்பில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022  சனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  பிரேரணைக்கமையவும் இந்தப் பெயர்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

அதேநேரம், இன்றையதினத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாய்மூல விடைக்கான கேள்விகள் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்களின் கீழ் நிதி அமைச்சரினால் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட கூற்றுத் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தமது கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், பி.ப 5.30 மணி வரை இவ்விவாதம் நடைபெற்றது. அதனையடுத்து நாளை (05) மு.ப 10.00 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom