இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு பத்தரமுல்லை நகரில் காணி ஒதுக்கும் நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் மீண்டும் அழைப்பு - பொறுப்பை சரியாகச் செய்யத் தவறியமை தொடர்பில் குழுவின் கடும் அதிருப்தி

திகதி : 2023-05-24

  • இலங்கை போக்குவரத்து சபையின் பல நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்
  • 2021 இல் போக்குவரத்து சபையின் நட்டம் 3059 மில்லியன் ரூபாய் - 2022 இல் இலாபம் 485 மில்லியன் ரூபாய்
  • சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் 800 வெற்றிடங்கள்
  • தவறான நடத்தை காரணமாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துனர்கள் 500 பேருக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்கள்

 

பஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு பத்தரமுல்லை நகரில் காணி ஒதுக்கும் நடவடிக்கையை நிறைவு செய்வதற்கான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அழைப்பதாக வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட நேற்று (மே 23) தெரிவித்தார்.

அதேபோன்று, இது தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில், பஸ்களை அடுத்த பயண நேரம் வரும்வரை நிறுத்துவதற்கு கொழுப்பு கோட்டைப் பகுதியில் பொருத்தமான காணியொன்றை ஒதுக்கும் நடவடிக்கையை விரைவு படுத்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யதாமினி குணவர்தன தலைமையில் உப குழுவொன்றை நியமிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பத்தரமுல்லை நகரில் பஸ் நிலையமொன்றை அமைக்குமாறு இதற்கு முன்னர் இந்தக் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாலும், அது தொடர்பில் செயற்படாமை குறித்து அதிகாரசபைக்கு குழு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

அதேபோன்று, பத்தமுல்லை நகரத் திட்டத்தில் பத்தமுல்லை சந்திக்கு அண்மித்த சந்தை காணப்படும் பகுதியில் காணி இருப்பது தொடர்பில் முன்னைய கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்படாமை தொடர்பில் குழு அதிருப்தியை வெளியிட்டது. பத்தரமுல்லை சந்திக்கு அருகில் அந்தக் காணி அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2021 ஆண்டறிக்கையில் எழும் விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் பல நிர்வாக சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தரம் 8 சித்தியடைந்தவர்கள் டிப்போ முகாமையாளர்களாக உள்ளமை, கணக்கியல், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் பதவிகளில் சிக்கல் நிலைமை காணப்படுகின்றமை இதன்போது புலப்பட்டது. தேர்தலை அடுத்து தகுதியற்ற ஒரு சில தொழிற்சங்கத் தலைவர்கள் டிப்போ முகாமைத்துவம் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வருவதால், அரசியல் தலையீடுகளிலிருந்து விடுபடுவதன் அவசியம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, 2021 இல் கொவிட் நெருக்கடி உள்ளிட்ட நிலைமைகள் காரணமாக போக்குவரத்து சபைக்கு 3059 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்தாலும், 2022 இல் 485 மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். தற்போதைய சிக்கல்களில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பற்றாக்குறை பிரதானமானது என அவர்கள் சுட்டிக்காட்டினர். தற்பொழு 26,561 பேர் கொண்ட முழு பணியாளர்கள் உள்ளமையும், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் 800 வெற்றிடங்கள் காணப்படுவதும் இதன்போது புலப்பட்டது. அதற்கமைய, அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், நாடு முழுவது 107 டிப்போக்களில் பல்வேறு தவறான நடத்தைகள் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட நடத்துனர்கள் சுமார் 500 பேர் காணப்படுவதாகவும் இதன்போது புலப்பட்டது. விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

நிறுவனத்தின் சம்பள அளவுகள் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளமை புதிய ஆட்சேர்ப்புகளுக்கு பாதிப்பதாக உள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சம்பளத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தினதும் நிதி அமைச்சின் செயலாளரினதும் கவனத்துக்கு கொண்டுவர வேண்டிய விடயங்களை அறிவிக்குமாறு குழுவின் தலைவர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும், எரிபொருள் பயன்பாடு மற்றும் முகாமைத்துவம் குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ உதயகாந்த குணதிலக, கௌரவ குமாரசிறி ரத்நாயக்க, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ ராஜிக்கா விக்ரமசிங்க மற்றும் கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

3 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom