இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற அமர்வு நாட்களும் நேரங்களும்

விதிகளின் முக்கியத்துவம் என்ன?

பாராளுமன்றத்தின் முறையான செயற்பாடுகளுக்கு வகைசெய்யும் முகமாக விதிகளும் நடைமுறைகளும் உருவாக்கப்பட்டுப் பின்பற்றப்படுகின்றன.இவ்விதிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சபையில் விவாதங்களின் தரத்தை உயர்த்த முடியும். சட்டங்களை நிறைவேற்றுவதிலும்,வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதிலும் ஏனைய விடயங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விவாதங்களில் பங்குபற்ற வேண்டியிருக்கின்றது. பாராளுமன்ற முறைமையில், சபையில் எல்லா நோக்குகளும் கருத்துக்களும் எண்ணங்களும் கருத்துப் படிவங்களும் ஓர் ஒழுங்குக் கிரமத்தில் எழுப்பப்படுகின்றன. அதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய முடிவுகள் எட்டப்படுகின்றன.


பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கான விதிகள் எவை?

பேசும் உறுப்பினர் எப்போதும் சபாநாயகரையே விளிக்க வேண்டும். அவர் பேசும்போது எழுந்து நிற்க வேண்டும். உறுப்பினர்கள், தொடர்பற்ற விடயங்களைப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கூறியது கூறலில் ஈடுபடக்கூடாது என அவர்கள் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்கள் முறையற்ற நோக்கங்களை மற்ற உறுப்பினர்கள் மீது சாட்டக்கூடாது. நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயங்களைப் பற்றியும் பேசக்கூடாது. எந்தப் பிரேரணை மீதும் அல்லது சட்டமூலம் மீதும் பிரேரணை பிரேரித்தவரைத் தவிர்ந்த மற்ற உறுப்பினர்கள் ஒரு தடவைக்கு மேல் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால், சபையின் குழுநிலையில் ஓர் உறுப்பினர் ஒரு தடவைக்கு மேல் பேச அனுமதிக்கப்படலாம். அத்துடன் பாதிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் சபையில் அதற்கான பிரேரணை இல்லாதவிடத்தும் தனிப்பட்ட விளக்கத்தைச் செய்ய உரித்துடையவராயிருக்கிறார். ஆனாலும் இந்த விளக்கங்களிலே விவாதங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பாராளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளைப் பாவியாது இருப்பதற்கு உறுப்பினர்கள் விசேட கவனம் எடுக்க வேண்டும்.டும்.


உரையாற்றாத உறுப்பினர்களுக்கான விதிகள் எவை?

உறுப்பினர்கள் கண்ணியமான முறையில் சபையில் பிரவேசிப்பதுடன், அவசியமில்லாமல் சபையைக் கடக்கவும் கூடாது. சபையின் உள்ளே புதினப் பத்திரிகைகள், புத்தகங்கள், கடிதங்கள் என்பனவற்றை வாசிக்க அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அமைதியாக இருப்பதுடன் சபையில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் வழிவிட்டாலொழிய அவரைக் குழப்பவும் கூடாது. சபையில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை விளக்கிக் காட்டப் பல்வேறு பொருட்களையும் கொண்டு வர முடியாது. கையடக்கத் தொலைபேசிகளும் ஒலிப்பதிவு உபகரணங்களும் சபையினுள் அனுமதிக்கப்படமாட்டா.


விவாதங்கள் தொடர்பான சபாநாயகரின் அதிகாரங்கள் யாவை?

இழிவாான அல்லது வெறுக்கத்தக்க குறிப்புக்களை வாபஸ் பெறுமாறு உறுப்பினரை சபாநாயகர் கேட்கலாம். விரும்பத்தகாத சொற்களை அதிகாரபூர்வப் பதிவுகளிலிருந்து (ஹன்சாட்) நீக்கவும் சபாநாயகரால் முடியும். சபை நடவடிக்கைகளைக் குழப்புவதில் அல்லது தடையேற்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபடும் உறுப்பினரை அவர் எச்சரிக்கலாம். குழப்பும் உறுப்பினரை சபையிலிருந்து அகற்றும்படி படைக்கலச் சேவிதரைக் கேட்டுக் கொள்ளலாம் அல்லது பெயர் குறிப்பிடலாம். ஓர் உறுப்பினர் சில வாரங்களுக்குச் சபையிலிருந்து தடுத்து வைக்கப்படலாம். ஓர் உறுப்பினருடைய நடத்தை முற்றும் ஒழுங்கீனமானதாக இருந்தால் சபாநாயகர் அவரை நாளின் மிகுதியான அமர்வில் பங்குபற்றாது தடை செய்து பாராளுமன்றத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டளையிடலாம்.


உரையாற்றுவோரின் நிரலைத் தயாரிப்பவர் யார்?

அரசாங்க மற்றும் எதிர்க் கட்சி முதற்கோலாசான்களே உரையாற்றுவோரின் நிரல்களைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். இந்த நிரல்கள் முன்னதாகவே சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுச் சபாநாயகர் அந்த உறுப்பினர்களைச் சபையில் பேசும்படி அழைப்பார்.


ஒழுங்குப் பிரச்சினைகள் என்றால் என்ன?

சபை நடவடிக்கைகளில் ஒழுங்கு மீறப்பட்டதாக ஓர் உறுப்பினர் உணர்ந்தால், அவ்விடயத்தை அவர் அவ்வப்போது எழுப்ப முடியும். ஒழுங்குப் பிரச்சினை எழுப்பப்படும்போது சபையில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் அவருக்கு இடமளிக்க வேண்டும். சபாநாயகரோ தலைமைதாங்கும் உறுப்பினரோ தன் முடிவை அறிவித்த பின்னர் உறுப்பினர் தமது பேச்சை மீண்டும் ஆரம்பிக்கலாம்.


வாக்கெடுப்புக்குப் பின்னர் ஓர் உறுப்பினர் பேச முடியுமா?

விவாதத்தின் இறுதியிலே உறுப்பினர்கள் தங்கள் சம்மதத்தை அல்லது எதிர்ப்பை "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்வதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். ஓர் உறுப்பினர் வாய்மூலம் முடிவு தெரிவிப்பில் திருப்தி கொள்ளாது விடின் வாக்கெடுப்பைக் கோரலாம். வாக்கெடுப்பானது நிரை நிரையாக சார்பானவர்களையும் எதிரானவர்களையும் எண்ணுவதன் மூலமோ அல்லது அவர்களின் பெயர்களை அழைத்து அவர்களின் விருப்பைப் பதிவு செய்வதன் மூலமோ நடாத்தப்படலாம். எந்த வழியில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிப்பது சபாநாயகரைப் பொறுத்தது.


கூட்ட நடப்பெண் என்றால் என்ன?

கூட்ட நடப்பெண்ணானது தலைமைதாங்கும் உறுப்பினர் உட்பட இருபது உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். கூட்ட நடப்பெண் காணப்படாத சமயத்தில், இந்த விடயம் தலைமைதாங்கும் உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால் அழைப்பு மணி ஒலிக்கச் செய்து, பின்பு ஐந்து நிமிடங்களின் முடிவிலும் கூட்ட நடப்பெண் காணப்படாத பட்சத்தில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பார்.


இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-06-19 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom