இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எவ்வாறு வாக்களிப்பது?

குறித்த விடயமொன்றிற்கு சபையின் தீர்ப்புத் தேவைப்படுமிடத்து அவ்விடயம் உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக அல்லது நிராகரிப்பிற்காகச் சபைக்கு விடப்படும். ஒவ்வொரு உறுப்பினரினது தீர்ப்பும் வாக்கெடுப்பொன்றின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும். வாக்கெடுப்பானது சபை அமர்வில் உள்ளபோது மட்டுமே நடத்தப்படலாம். எந்தவொரு உறுப்பினரும் ஒரு வாக்கிற்கு உரிமையுடையவரென்பதோடு, அவர் அதனைத் தனிப்பட்ட வகையில் பிரயோகிக்கவும் வேண்டும். வாக்களிக்கும்போது, ஓர் உறுப்பினர் தனக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருத்தல் வேண்டும். எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதற்கான உரிமை உண்டு. எனினும் ஓர் உறுப்பினர் தான் விரும்பினால் வாக்களிக்காமலும் விடலாம். பாராளுமன்றத்தில், மூன்று வெவ்வேறு வழிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம். அவையாவன:

அ. குரல் மூல வாக்கெடுப்பு

குரல் மூல வாக்கெடுப்பே மிகவும் பொதுவான வாக்கெடுப்பு முறையாகும். நிலையியற் கட்டளை 47 இன்படி, சபாநாயகர் ஒரு விடயத்தைச் சபைக்கு விடும்போது, ஒரு தீர்மானத்திற்குச் சார்பானவர்கள் "ஆம்" என்பர், எதிரானவர்கள் "இல்லை" என்பர். சபையின் கருத்துப் போதுமான அளவிலும், தெளிவாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதெனச் சபாநாயகர் உணருமிடத்து, அவர் அதனைச் சபைக்கு அறிவிக்கலாம். சபாநாயகரின் தீர்ப்பில் ஓர் உறுப்பினர் திருப்தி கொள்ளாதவிடத்து, அவர் வாக்கெடுப்பொன்றைக் கோரலாம்.

ஆ. பெயர் மூல வாக்கெடுப்பு

பெயர் மூல வாக்கெடுப்பிற்கான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டவிடத்து, நிலையியற் கட்டளை 47இல் குறிக்கப்பட்டுள்ளவாறு சபாநாயகர் நடவடிக்கை மேற்கொள்வார். இதன்போது, வாக்கெடுப்பிற்கான மணி இரண்டு நிமிடங்களுக்கு ஒலிக்கப்பட வேண்டுமென்பதோடு, வாக்கெடுப்பு, பெயர் மூலம் நடாத்தப்படுதலும் வேண்டும். செயலாளர் நாயகம், ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வாறு வாக்களிக்க விரும்புகிறார் என்பதை அவர்களிடம் தனித்தனியே கேட்பதன் மூலமும் அதன்படி வாக்குகளைப் பதிவதன் மூலமும் வாக்கெடுப்பை நடத்துவார். செயலாளர் நாயகம் முதலாவதாகப் பிரதம அமைச்சரையும் அதன் பின்னர் அமைச்சரவை அமைச்சர்கள், ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரை அவரவர் பெயர்களின் அகர வரிசை ஒழுங்கிலும் அதன் பின்னர் ஏனைய உறுப்பினர்களை அவரவர் பெயர்களின் அகர வரிசை ஒழுங்கிலும் கேட்பார். ஓர் உறுப்பினர் தான் வாக்களிக்க மறுப்பதாகக் கூறலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில், செயலாளர் நாயகம் அத்தகைய உறுப்பினரின் பெயரை வாக்களிக்க மறுத்தவராகப் பதிவு செய்தல் வேண்டும்.

இ. எழுந்து நின்று வாக்களித்தல்

சபாநாயகர் விரும்பினால் நிலையியற் கட்டளை 47இல் விளக்கப்பட்டவாறு வாக்கெடுப்பை நடத்தலாம். இதன்படி, உறுப்பினர்களைத் தத்தமக்குரிய இடங்களில் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொள்ளலாம். செயலாளர் நாயகம், எழுந்து நிற்பவர்களை எண்ணி முடிவைச் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும். சபாநாயகர் முடிவைச் சபைக்கு அறிவிக்க வேண்டும். தாம் தவறாக வாக்களித்துவிட்டதாக அல்லது தமது வாக்குத் தவறாக எண்ணப்பட்டு விட்டதாக ஓர் உறுப்பினர் கருதுமிடத்து, தனது வாக்கைத் திருத்துவிக்க அவர் கோரலாம். எனினும், வாக்கெடுப்பின் முடிவைச் சபாநாயகர் அறிவிப்பதற்கு முன்னரே இதனைச் செய்தல் வேண்டும்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2018-04-23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom