இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

விதிகளும் நடைமுறைகளும்

பாராளுமன்ற அமர்வொன்றின் போது, சபை அமர்வுகளை ஒத்திவைத்ததன் பின்பு, ஒத்திவைப்புப் பிரேரணைக்கான விதிகளும் ஒழுங்கு விதிகளும்

ஒவ்வொரு அமர்வு நாளிலும், பாராளுமன்ற ஒத்திவைப்பு நேரத்தில், ஒரு மணி நேரத்திற்கு, ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை எடுத்துக் கொள்வது, என்ற நடைமுறைக்கு, பாராளுமன்ற அலுவல்களுக்கான குழு இணங்கியுள்ளது. ஒத்திவைப்புப் பிரேரணை பற்றி அறிவித்தல் விடுக்க விரும்பும் உறுப்பினர், அவ்வறிவித்தலை எழுத்து மூலமாக, அதற்கு முன்னைய தினத்தில் மதியம் 12.00 மணிக்கு முன்னதாக, அவர் சார்ந்த, சபைமுதல்வரூடாக அல்லது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினூடாகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறான பிரேரணைகள் ஒத்திவைப்பு வேளையில், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் பி.ப. 6.30 மணிக்கும் எடுத்துக் கொள்ளப்படும்.

 

அவ்வாறான அறிவித்தல் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கிடைத்ததும், அதன் பிரதி ஒன்று சபை முதல்வரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் செயலாளர், சம்பந்தப்பட்ட அமைச்சு, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காகவும், விசேடமாக அமைச்சர் விவாதத்தின்போது பதிலளிப்பதற்காகச் சமுகமளித்திருப்பதற்கும், பிரேரணையைப் பற்றி அவர் போதுமான அளவிற்கு அறிந்து கொள்வதற்கு உதவி செய்வதற்குமாக, அதே பிரதியினை அனுப்பிவைக்கக் கூடியதாகவிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒர் ஒத்திவைப்புப் பிரேரணை மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படும். எனினும், நீதிமன்றத்திலே விசாரணைக்காக உள்ள ஒரு விடயத்தின் பேரிலே ஒரு பிரேரணையை அனுமதிக்காதிருப்பதற்கான அல்லது பாராளுமன்றத்தின் ஒரே அமர்வின்போது ஒரே பிரேரணையை மீண்டும் கொண்டுவருவதை அனுமதிக்காதிருப்பதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.

 

ஒத்திவைப்புப் பிரேரணை உறுப்பினர் ஒருவரால் பிரேரிக்கப்பட்டதும், அது இன்னுமோர் உறுப்பினரால் வழிமொழியப்படல் வேண்டும். விவாதத்தின் பின், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளித்தல் வேண்டும். விவாதத்திலே 30 நிமிட நேரம் அரசாங்கத்திற்கும், 30 நிமிட நேரம் எதிர்க்கட்சிக்கும் ஒதுக்கப்படும். ஒத்திவைப்பு விவாதங்களிலே வாக்கெடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. மேற்கூறப்பட்டுள்ள முறை 1995 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. முன்பு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி ஒத்திவைப்பின் பின் 10 வினாக்கள் வினவுவது வழக்கமாகவிருந்தது.

 

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இணக்கத்துடன் எடுக்கப்படும் ஒத்திவைப்புப் பிரேரணைகள்.

ஒத்திவைப்புப் பிரேரணைகள், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இணக்கத்துடனும் எடுக்கப்படுகின்றன. அவ்வாறான பிரேரணைகள் கூறப்பட்ட குழுவினால் தீர்மானிக்கப்படுகின்ற கால அளவிற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


ஒத்திவைப்புப் பிரேரணையின் பயன்பாடு

இது குறுகிய அறிவித்தலிலே, பொது முக்கியத்துவம் வாய்ந்த, அவசரமான விடயம் ஒன்றினைப் பற்றி முழுச் சபையினதும் கவனத்தை ஈர்ப்பதற்கும் கவர்வதற்கும், சம்பந்தப்பட்ட அமைச்சரை, உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்கச் செய்வதற்கும் தனியார் உறுப்பினர்களுக்குள்ள மிகுந்த பயனுள்ள முறையாகும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-02-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom